SELANGOR

பாங்கியில் வெ. 267.6 மில்லியன் செலவில் மருத்துவமனை நிர்மாணிக்கப்படும்

ஷா ஆலம், ஜன.11:

சிலாங்கூர் மேம்பாட்டு கழகம் (பிகே என் எஸ்) அதன் துணை நிறுவனமான செல்கேட் கார்ப்பரேஷன் மற்றும் புரோபாடு ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து 267.6 மில்லியன் வெள்ளி மதிப்பிலான நவீன வசதிகள் நிறைந்த மருத்துவமனை ஒன்றை பாங்கியில் நிர்மாணிக்கும் உடன்படிக்கையில் இன்று கையெழுத்திட்டது.

இந்த மருத்துவமனையில் 223 கட்டில்கள் மற்றும் அதி நவீன தொழில்நுட்ப மருத்துவச் சாதனங்களும் இடம்பெறவிருப்பதால், பாங்கி மக்கள் இனி தரமான மருத்துவச் சேவையை எதிர்பார்க்கலாம். மேலும் இங்கு உடல் பருமன், மகளிர் . சிறார், எலும்பியல் ஆகிய துறைகள் உட்பட அறுவை சிகிச்சை அறைகளும் இருக்கும் என்று மந்திரி புசார் அமிருடின் ஷா தெரிவித்தார்.

“மாநில அரசு மருத்துவத் துறையிலும் ஈடுபடும் என்று கடந்த 2015ஆம் ஆண்டு அறிவித்ததற்கு இணங்க இந்த திட்டம் அமைந்துள்ளது.”

மருத்துவச் சுற்றுலாவிற்கு வழி வகுக்கும் மருத்துவத் துறையில் முதலீடு செய்வது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் என்றார் அவர்.

சுல்தான் சலாஹுடின் அப்துல் அஸிஸ் ஷா கட்டடத்தில் நடைபெற்ற செல்கேட் மற்றும் புரோபாடு நிறுவனங்களுக்கிடையிலான மருத்துவமனை நிர்மாணிக்கும் உடன்படிக்கை கையெழுத்திடும் நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் மந்திரி புசார் அமிருடின் ஷா மேற்கண்ட தகவல்களை தெரிவித்தார்.


Pengarang :