NATIONAL

மாமன்னர் பதவியிலிருந்து சுல்தான் முகமது விலகினார்

கோலா லம்பூர், ஜனவரி 6:

நாட்டின் 15ஆவது மாமன்னர் சுல்தான் முகமட் V தமது பதவியிலிருந்து விலகிக் கொண்டார். இந்த பதவி விலகல் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இந்த பதவி விலகல், கூட்டரசு சட்டமைப்பு விதி 32(3) கீழ் வருகிறது என்று அரச முத்திரை காப்பாளர் டத்தோ வான் அகமட் டஹ்லான் அப்துல் அஸிஸ் கூறினார்.
மலாய் ஆட்சியாளர் மன்றத்தின் செயலாளருக்கு அனுப்பிய மடல் வழி மாமன்னர் தமது முடிவை மலாய் ஆட்சியாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.

மாமன்னராக அவர் பதவி வகித்த காலத்தில் நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு ஏற்ப தமது கடமைகளை நிறைவேற்றியுள்ளார்.
நாட்டின் நிலைத்தன்மை நீடிக்கவும் மக்களை ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாகவும் நீதியுடனும் நேர்மையான முறையிலும் கடமையாற்றினார் என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது.

அதேவேளையில், தம்மை நாட்டின் 15ஆவது மாமன்னராக கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி தேர்ந்தெடுத்ததற்கு மலாய் ஆட்சியாளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்ததாகவும் டத்தோ வான் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


Pengarang :