SELANGOR

சேதமடைந்த வீடுகள் மறுநிர்மாணிப்பு செலவினம் மாநில அரசு ஏற்றுக் கொள்ளும்

ஷா ஆலம், பிப்.16:

அண்மையில் தஞ்சோங் காராங்கில் வீசிய புயல் காற்றினால் சேதமடைந்த வீடுகளின் மறு நிர்மாணிப்பு செலவினங்களை மாநில அரசு முழுமையாக ஏற்றுக் கொள்ளவிருக்கிறது.

இந்த வீடுகளின் மறு நிர்மாணிப்புக்குத் தேவைப்படும் 1.629 மில்லியன் வெள்ளியை மந்திரி பெசாரின் சமூக கடப்பாட்டு கழகம் ஏற்றுக் கொள்ளும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையில் சுங்கை புரோங் மற்றும் பெர்மாத்தாங் சட்டமன்ற தொகுதிகளின் மக்கள் சேவை மன்றங்களின் ஒத்துழைப்பும் நாடப்படும் என்றும் அவர் சொன்னார்.

இந்தப் பேரிடரில் பாதிப்புற்றோரின் உடனடி தேவைகளை நிறைவு செய்வதற்காக கோல சிலாங்கூர் மாவட்ட பேரிடர் நிர்வாக செயற்குழுவின் மூலம் சிலாங்கூர் மாநில சிறப்பு பேரிடர் நிதியில் இருந்து 87 ஆயிரம் வெள்ளி வழங்கப்படும் என்று அமிருடின் அறிவித்தார்.

பேரிடருக்கு இலக்கான மக்களின் துயரங்களை மாநில அரசு அறிந்துள்ளது. அவர்களுடைய சுமையைக் குறைக்க அனைத்து வகையான உதவிகளையும் அரசு அவ்வப்போது வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :