NATIONAL

நாட்டின் மேம்பாட்டில் உந்துசக்தியாக மகளிர் விளங்குகின்றனர்- ஜுரைடா கமாருடின்

புத்ரா ஜெயா, மார்ச் 8-

உலகளாவிய மேம்பாட்டில் மகளிர் முக்கிய பங்காற்றி வருகின்றனர். நாகரீகத்தின் முதுகெலும்பாக விளங்கும் மகளிர், பொருளாதாரம், கலாச்சாரம், சமூகவியல், கல்வி ஆகியவற்றின் மேன்மைக்கும் உந்துசக்தியாக இயங்குகின்றனர். ஒரு நாட்டின் மேன்மைக்கும், மகளிர் முக்கிய பங்காற்றுகின்றனர் என்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சர் புவான் ஹாஜா ஜுரைடா கமாருடின் தெரிவித்தார்..

நீடித்த, நிலையான மேம்பாடு என்பது நாட்டின் புற வளர்ச்சியை மட்டும் சார்ந்தது அல்ல. மாறாக, சமூக வளப்பம் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது. மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு மேம்பாட்டு திட்டமும் எந்தவொரு தரப்புக்கும் தீங்கு இழைக்காமல் இருப்பதும் இன்றைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கும் நன்மையளிப்பதாக இருக்க வேண்டும் என்றார் அவர்.

ஒவ்வொரு கொள்கை மற்றும் செயல்திட்ட உருமாற்றத்திலும் இரு பாலரையும் சம அளவில் ஈடுபடுத்தும் நோக்கத்தில், அனைத்து மேம்பாட்டு நடவடிக்கையிலும் மகளிர் விடுபடாமல் இருப்பதை அமைச்சு உறுதி செய்துள்ளதை ஜுரைடா சுட்டிக் காட்டினார்.

மேலும், சமுதாயத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளில் மகளிரின் நேரடி பங்களிப்பு இருப்பதும் உறுதி செய்யப்படும் என்றார் அவர்.

தேசிய சமூக கொள்கை, 2019ஆம் ஆண்டு தேசிய வீடமைப்பு கொள்கை மற்றும் தேசிய கட்டுப்படி வீடமைப்பு கொள்கை ஆகிய மூன்று முக்கிய திட்டங்களில் மகளிரின் ஈடுபாட்டை அமைச்சு உறுதி செய்துள்ளது. வீடமைப்பு ஊராட்சி அமைச்சின் மேம்பாட்டு திட்டங்களில் மகளிர் நேரடியாக ஈடுபடுத்தப்பட்டுள்ளது இதன் வழி தெளிவாகிறது என்றார் அவர்.

அதேவேளையில், புத்தாக்கமிக்க மேம்பாட்டுத் திட்டங்களில் அமைச்சு கவனம் செலுத்துகிறது. இதன் வழி இரு பாலரும் சம அளவில் பங்களிக்கும் முறை துரிதப்படுத்தப்படும். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய பொறுப்புகளில் மகளிரை ஈடுபடுத்துவதற்கு இது அவசியம் என்றும் அவர் சொன்னார்.

ஊராட்சி மன்றங்களில் வரையப்படும் ஒவ்வொரு கொள்கை, செயல்திட்டம் மற்றும் எடுக்கப்படும் முடிவுகள் என அனைத்திலும் பெண்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதற்கு அமைச்சு வழி அமைத்துள்ளது என்றார் அவர்.

நீடித்த, நிலையான மேம்பாட்டை அடைய விரும்பும் ஒரு நாடு அனைத்து தரப்புகளையும் உள்ளடக்குவது அவசியமாகும். இதில் மகளிர் முக்கிய பங்களிப்பதற்கு இன்று அமல்படுத்தப்பட்டுள்ள இந்த கொள்கை மிகவும் அர்த்தமுள்ளது என்று அவர் வர்ணித்தார்.

உலகளவில் இன்று கொண்டாடப்படும் 2019ஆம் ஆண்டு மகளிர் தினம், நாட்டில் வாழும் அனைத்து பெண்களிடத்திலும் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதோடு அனைத்து சமூக, மேம்பாட்டு திட்டங்களிலும் அனைவருக்கும் சமமான வாய்ப்பளிக்கப்படுவது உறுதி செய்யப்படும் என்றும் ஜுரைடா நம்பிக்கை தெரிவித்தார்.

நாட்டில் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்கள் மற்றும் அமலாக்க நடவடிக்கைகளில், மகளிருக்கு முக்கிய இடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையோடு அனைத்து மகளிருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துகளை அமைச்சர் ஜுரைடா தெரிவித்துக் கொண்டார்.


Pengarang :