ஹெலிகாப்டர் விபத்து-  புண்படுத்தும் வகையில் கருத்தினை பதிவிட்ட நபருக்கு வெ.23,000  அபராதம்

தைப்பிங், ஏப்ரல் 27 – லுமுட் அரச மலேசிய கடற்படைத் தளத்தில் ஒத்திகையின் போது நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பில் மனம் புண்படும்படியான கருத்தை வெளியிட்ட  இணைய வர்த்தகர் ஒருவருக்கு இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று 23,000 வெள்ளி அபராதம் விதித்தது.

குற்றத்தை ஒப்புக்கொண்ட சைபுடின் ஷாபிக் (வயது 35) என்ற அந்நபர் அபராதத்தை செலுத்தத் தவறினால் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி நபிஷா இப்ராஹிம் உத்தரவிட்டார்.

இதுபோன்ற குற்றங்களை மீண்டும் நிகழ்வதைத் தடுக்கவும், சமூக ஊடகங்களின் பொறுப்பான பயன்பாடு குறித்து பொதுமக்களை எச்சரிக்கவும் கூடிய ஒரு நினைவூட்டலாக இந்த தண்டனை அமைகிறது.  சமூக ஊடகங்களை விவேகமுடன் பயன்படுத்துங்கள் என்று அவர் தனது தீர்ப்பில் கூறினார்.

தனது செயலுக்காக பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள், மலேசிய ஆயுதப்படை  மற்றும் பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதாக சைபுடின் தனது கருணை மனுவில் தெரிவித்தார் .

அந்தப் பதிவை இடுகையிட்டபோது​​நான் அறிந்திருந்தேன். எனது அச்செயலுக்காக  மிகவும் வருந்துகிறேன். இருமுனைப் பிறழ்வு குறைபாட்டினால் நான்  பாதிக்கப்படவில்லை என்றால் அவ்வாறு செய்திருக்க மாட்டேன் என்று அவர் கூறினார்.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க தனது எக்ஸ் தள கணக்கை தாம் முடக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக இதுபோன்ற ஒரு சோகமான நிகழ்வின் போது எனது பொருத்தமற்ற செயலுக்காக நான் மிகவும் வருந்துகிறேன் என்று அவர் கூறினார்.


Pengarang :