NATIONAL

மகாதீர் குறித்து நூருல் எதிர்மறையாகப் பேசியிருக்கக் கூடாது!

கோலாலம்பூர், மார்ச் 26-

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் குறித்து பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இஸா எதிர்மறையான கருத்துகளை வெளியிட்டிருக்கக் கூடாது. அதிலும் சிங்கப்பூர், தெ ஸ்டிரெய்ட் டைம்ஸ் நாளிதழின் பேட்டியில் கூறியிருப்பது தவறு என்று கருத்து நிலவுகிறது.

அரசியல் களத்தில் அதிகளவு அனுபவம் இல்லாத நூருல் இஸா, மகாதீர் மற்றும் புதிய அரசாங்கத்தை சரிவர புரிந்து கொள்ளாமல் உணர்ச்சிகரமான கருத்துகளை வெளியிட்டது தவறு என்று பிரதமரின் அரசியல் செயலாளர் அபு பாக்கார் கூறினார்.

பிரதமரையும் அரசாங்கத்தையும் தனிப்பட்ட கண்ணோட்டத்தில் பார்க்காமல், நாடு மற்றும் மக்களின் நலனை முன்னிருத்தி பார்க்க வேண்டும் என்றார் அவர்.

புதிய அரசாங்கத்திற்கு தலைமையேற்க வேண்டும் என்ற முடிவை பக்காத்தான் கூட்டணி தலைவர் அனைவரும் ஒருமித்தமாக எடுத்த முடிவின் காரணமாக மகாதீர் இன்று பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார் என்பதை ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பிகேஆர் கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் என்ற முறையில் நூருல் இஸா மறந்திருக்க வாய்ப்பில்லை என்று அவர் சொன்னார்.

அதேவேளையில், துன் மகாதீர் இல்லாமல் பக்காத்தான் கூட்டணி நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் வென்று புதிய அரசாங்கத்தை அமைத்திருக்க முடியாது என்பதையும் நூருல் அறிந்திருப்பார் எனத் தாம் நம்புவதாக அபு பாக்கார் கூறினார்.


Pengarang :