NATIONAL

ஈசிஎல்ஆர்: கிழக்கு கரையில் தொழிற்துறை வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்

மலாக்கா, ஏப்.30-

ஈசிஎல்ஆர் எனப்படும் கிழக்கு கரை ரயில் போக்குவரத்து திட்டமானது கிழக்கு கரை மாநிலங்களுக்கு புதிய தொழிற்துறையைக் கொண்டு செல்வதோடு அதன் மக்களுக்கு லாபமளிக்கும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தெரிவித்தார்.

ஒரு வேளை புதிய தொழிற்துறை அங்கு தொடங்கப்படவில்லை என்றால் பொருளாதார வளர்ச்சியும் ஏற்படாது. அதோடு, கார்கோ போக்குவரத்திற்கும் இந்த ரயில் பயன்படுத்தப்படாது. அவ்வாறு நடந்தால், இந்தத் திட்டத்தை மேற்கொள்வதற்கு காரணமும் இருக்காது என்று அவர் விளக்கினார்.

இந்தத் திட்டத்தை நிறைவேற்ற சில புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. கிழக்கு கரையில் புதிய தொழிற்துறை தொடங்கப்பட வேண்டும். பொருளாதாரத்தை மேம்படுத்த தொழில்துறை வளர்ச்சி காணுவதோடு இந்த ரயில் மூலம் கிள்ளான் துறைமுகத்திற்கு சரக்குகள் அனுப்பப்பட வேண்டும் என்று அஸ்மின் அலி கூறினார்.

மலாக்காவில் நடைபெற்ற ஆற்றல்மிக்க மலாக்கா கருத்தரங்கில் முக்கிய உரை நிகழ்த்திய பின்னர் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அஸ்மின் அலி மேற்கண்டவாறு பேசினார்.


Pengarang :