NATIONAL

இசா சமாட் ஊழல் வழக்கு: தற்காப்புத் தரப்பிடம் 3 ஆவணங்கள் ஒப்படைப்பு

கோலாலம்பூர், மே 13-

பெல்டாவின் 3 மில்லியன் வெள்ளி வழக்கில் நம்பிக்கை மோசடி, அதிகார துஷ் பிரயோகம் உட்பட 9 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள அதன் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ முகமது இசா அப்துல் சமாட்டின் வழக்கறிஞர்களிடம் அவ்வழக்கு தொடர்ப்பான எஞ்சிய 3 ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக இன்று உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி முகமது நஸ்லான் முகமது கசாலி முன்னிலையில் நடைபெற்ற வழக்கு நிர்வாக நடவடிக்கையின் போது அரசு தரப்பு துணை பிராசிகியூட்டர் சுமன் பிள்ளை இதனைத் தெரிவித்தார்.

“குற்றவியல் சட்டத்தின் 51ஆவது பிரிவின் படி சம்பந்தப்பட்ட ஆவணங்கள் தற்காப்புத் தரப்பிடம் ஒப்படைக்கப்படும் தேதி நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி அரசாங்க வழக்கறிஞர் தரப்பு அந்த 3 ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களிடம் இன்று வழங்கியது” என்றார் அவர்.

அரசு மற்றும் தற்காப்பு ஆகிய தரப்புகளும் வழக்கை நிர்வகிக்கவும் சாட்சிகளின் சாட்சியங்களைத் திருத்தி அமைக்கவும் ஒரு மாத கால அவகாசம் கோரி நீதிமன்றத்திடம் விண்ணப்பித்துள்ளதாக சுமன் கூறினார்.

இரு தரப்புகளின் கோரிக்கைகளை ஆராய்ந்த பின்னர் ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி இந்த வழக்கு நிர்வாக நடவடிக்கை மீண்டும் நடைபெறும் என்று நீதிபதி அறிவித்தார்.


Pengarang :