NATIONAL

எஸ்ஆர்சி நிதி வழக்கு: தற்காப்பு தரப்பிடம் 200 பக்கங்கள் அடங்கிய ஆவணங்கள் ஒப்படைப்பு

கோலாலம்பூர், ஜூன் 21:

எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் 27 மில்லியன் வெள்ளி நிதி தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீது சுமத்தப்பட்டுள்ள கள்ளப் பண வழக்கு தொடர்பில் தற்காப்புத் தரப்பிடம் அரசு தரப்பு 200க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட 26 ஆவணங்களை ஒப்படைத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட அந்த ஆவணங்களை தற்காப்புத் தரப்பிடம் நேற்று தாங்கள் ஒப்படைத்ததாக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு நிர்வாகத்தின் போது அரசு தரப்பு துணை வழக்கறிஞர் புடிமான் லுட்ஃபி முகமட் குறிப்பிட்டார்.

இதனிடையே, வாதி தரப்பில் 30 சாட்சிகள் அழைக்கப்படுவர் என்றும் இவ்வழக்கு விசாரணை 2020ஆம் ஆண்டு ஜூன் 2 தொடங்கி ஜூன் 25ஆம் தேதி வரை நடைபெறும் என்று நீதிபதி கடந்த மாதம் தேதி நிர்ணயித்ததாக புடிமான் செய்தியாளர்களிடம் கூறினார்.

முன்னதாக, ஆம்பேங்கில் தமக்குச் சொந்தமான 3 கணக்குகளில் 27 மில்லியன் வெள்ளி சேர்ப்பிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தம்மீது சுமத்தப்பட்ட 3 குற்றச்சாட்டுகளையும் நஜிப் மறுத்து விசாரணை கோரினார்.


Pengarang :