NATIONAL

நோன்பு பெருநாள்: அமைச்சர்கள் வாழ்த்து

கோலாலம்பூர், ஜூன் 4-

ஹரிராயா பெருநாள் கொண்டாடும் இந்நாட்டிலுள்ள இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்த அன்பர்களுக்கு அமைச்சர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
நாளை கொண்டாடவிருக்கும் நோன்பு பெருநாளையொட்டி இந்நாட்டிலுள்ள இஸ்லாமியர்கள் ஒருவர் மற்றொருவருடன் அன்பைப் பறிமாறிக் கொள்ள வேண்டும் என்று உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்தார்.

சக மனிதர்களை மதிப்பதே இஸ்லாமியர் ஒருவருக்கு இருக்க வேண்டிய மிக முக்கிய பண்பாகும் என்று முகைதீன் குறிப்பிட்டார்.
“குடும்ப உறுப்பினர்கள், உற்றார் உறவினர்கள், அண்டை அயலார் உட்பட நாட்டு மக்கள் அனைவரிடத்திலும் அன்பை விதைப்போம்” என்று அவர் மேலும் கூறினார்.

“வெறுப்பு, பகைமை, சண்டை சச்சரவு போன்றவற்றை வேறோடு அறுப்போம். இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது பிற சமயத்தைச் சேர்ந்தவர்களுடன் பேசும்போதும் மிக கவனமுடன் இருப்போம்” என்று இஸ்லாமியர்கள் அனைவருக்கும் தமது குடும்பத்தார் சார்பில் ஹரிராயா வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தொடர்ந்து, தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தமது முகநூல் மற்றும் ட்வீட்டரில் நோன்பு பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

“மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் இத்திருநாள் நம் அனைவருக்கும் அர்த்தமுள்ள ஒரு நாளாக அமையட்டும்” என்று தாமும் தமது அமைச்சின் பணியாளர்களும் இணைந்து வழங்கிய ஹரிராயா வாழ்த்துச் செய்தி அடங்கிய 30 வினாடி காணொளியில் தெரிவிக்கப்பட்டது.

இனங்களுக்கிடையிலான அணுக்கமான ஒத்துழைப்பு மற்றும் நாட்டின் நிலைத்தன்மை ஆகியவை நாட்டில் நோன்பு பெருநாள் மக்களால் சுபிட்சத்துடன் கொண்டாடுவதற்கு வழிவகுத்துள்ளது என்று பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி கூறினார்.

பெண்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கவும் தொடர்ந்து மலேசிய மக்களுக்காக சிறந்த வீடமைப்பு வசதிகளை ஏற்படுத்தி உள்ள பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அரசாங்கம் செயல்படுத்தும் அனைத்து திட்டங்களையும் மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஸூரைடா கமாருடின் தமது ஹாரி ராயா வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.  இன மற்றும் மத ரீதியாக மக்களைப் பிளவுபடுத்தி ஆதாயம் தேடும் முயற்சியில் ஈடுபடுவோர்களை மலேசிய மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் இந்த  புனித திருநாளில் அனைவரும் ஒற்றுமையாக கொண்டாடி மகிழ வேண்டும் என்று அறிவுறுத்தினார்.


Pengarang :