NATIONAL

வேலை அழுத்தத்தால் படித்தவர்களும் போதைப் பொருளுக்கு அடிமை!

கோலாலம்பூர், ஜூன் 6-

வேலையில் ஏற்பட்ட மன அழுத்தத்திற்குத் தீர்வு காண மருத்துவர் ஒருவர் போதைப் பொருளை நாடியதோடு அதற்கு அடிமையாகி உள்ளார் என்றால் நம்புவதற்கு சிரமமாகத்தான் இருக்கும்.
ஆனால், அதுதான் உண்மை. ஜோகூர் பாருவில் உள்ள அரசாங்க மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருந்தபோது டாக்டர் சசிதரன் (வயது 39) வேலைப் பளு காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தைப் போக்குவதற்காக ஷாபு வகை போதைப் பொருளை எடுக்கத் தொடங்கி பின்னர் அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.

48 மணி நேர ஷிப்ட் வேலை, ஓய்வு இல்லாததால் உடலுக்கு ஊக்கம் தருவதற்கு ஷாபுவை உட்கொள்ளத் தொடங்கியுள்ளார். தாம் ஒரு மருத்துவராக இருப்பதால் தம்மால் இந்த பழக்கத்தில் இருந்து எளிதாக மீள முடியும் என்று அவர் போட்ட கணக்கு தவறாகிப் போனது.

தனது நிலைமையை உணர்ந்ததும் 2016ஆம் ஆண்டில் இங்குள்ள போதைப் பித்தர் மறுவாழ்வு மையத்தில் சேர்ந்தார். ஆயினும் 2017ஆம் ஆண்டில் அவரது தந்தையின் உடல்நிலை மோசமடைந்ததால் அங்கிருந்து வெளியேறி உள்ளார்.

ஆனால், வெளியே உள்ள சூழ்நிலைக்கு தன்னால் இணங்கி போக முடியாததால் மீண்டும் போதைப் பொருள் பழக்கம் அவரைப் பற்றிக் கொண்டது.
“போதைப் பொருள் பழக்கம் என்றவுடன் அது படிக்காதவர்கள் மத்தியில் ஏற்படும் பழக்கம் என்று நம்மில் பலர் நினைக்கிறோம். ஆனால், படித்தவர்கள், நல்ல உத்தியோகத்தில் இருப்பவர்களும் இந்தப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர் என்பதே உண்மையான நிலை என்கிறார் ‘பெங்காசே’ எனும் அமைப்பின் தலைவரான ரம்லி அப்துல் சமாட்.


Pengarang :