SELANGOR

அனைவரின் வாழ்விலும் இன்பம் பொங்கட்டும்! – மந்திரி பெசார் பொங்கல் வாழ்த்துச் செய்தி

கோலாலம்பூர், ஜன.15-

பொங்கல் அல்லது அறுவடைத் திருநாளான இது தமிழர்களின் புத்தாண்டாகக் கருதப்படுகிறது. உற்றார் உறவினர்களோடு சேர்ந்து பொங்கலிட்டு பிறக்கும் புத்தாண்டில் நன்மைகள் பொங்கி வழியும் என்பது தமிழர்கள் நம்பிக்கையாகும்.

“அது போலவே, சிலாங்கூரில் வாழும் அனைத்து மக்களின் வாழ்விலும் நன்மைகள் பல பொங்கி வழிய வேண்டும் என்பதே மாநில அரசின் எதிர்பார்ப்பாகும்” என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

“இதன் அடிப்படையில், ஏழ்மையில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மாநில அரசு பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. இதில் இந்திய சமூகத்தைச் சேர்ந்த தொழில்முனைவர்களை மேம்படுத்த ‘குரோவ்’ எனும் திட்டத்தின் கீழ் 1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றார் அவர்.

இச்சமூகத்தினரை அங்கீகரிப்பதோடு அவர்களின் நலனில் அக்கறைக் கொண்டுள்ள சிலாங்கூர் அரசாங்கம் இந்த சமூகத் தலைவர்களுக்கான அலவன்ஸ் தொகையை சிலாங்கூர் 2020 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

பிறந்துள்ள இப்புத்தாண்டு சிலாங்கூருக்கும் அதன் மக்களுக்கும் புத்துணர்ச்சியையும் புதுத் தெம்பையும் வழங்கும் என்று நம்புவோம். பொங்கல் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் மந்திரி பெசார் தனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.


Pengarang :