NATIONAL

பிளஸ் நிறுவன நெடுஞ்சாலைகளில் 38 ஆண்டுகளுக்கு டோல் கட்டண அதிகரிப்பு இல்லை!

ஷா ஆலம், ஜன.17-

மலேசிய பிளஸ் நிறுவனத்தின் பராமரிப்பில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளிலும் அடுத்த 38 ஆண்டுகளுக்கு டோல் கட்டணம் அதிகரிக்கப்படாது. இது வரும் பிப்ரவரி முதல் தேதி நடப்புக்கு வரும். அதே வேளையில், இந்நிறுவனத்திற்கு அரசாங்கம் எந்தவொரு இழப்பீடும் வழங்கத் தேவையில். இதன் காரணமாக மொத்தம் 42 பில்லியன் ரிங்கிட் சேமிக்கப்படுவதாக பிரதமர் துறை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

“இதற்கு முன்னர் இந்த நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனத்துடன் செய்த உடன்படிக்கையில் டோல் கட்டணம் கட்டம் கட்டமாக அதிகரிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்த போதிலும் புதிய முடிவின்படி அடுத்த 38 ஆண்டுகளுக்கு 2020-2058 வரை டோல் கட்டணம் அதிகரிக்கப்படாது” என்று அது கூறியது.

“அரசாங்கத்தின் இந்த முடிவு மக்களுக்கு நன்மையளிக்கும் அதே வேளை, பிளஸ் நிறுவனமும் தொடர்ந்து சீராக செயல்பட அதன் நிதி நிலவரமும் சமூகமாக இருக்கும்” என்று அரசாங்கம் நம்பிக்கை கொண்டிருப்பதாக அவ்வறிக்கை மேலும் தெரிவித்தது.

வடக்கு தெற்கு நெடுஞ்சாலை (பிளஸ்), புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலை (என்கேவிஇ), இலைட் நெடுஞ்சாலை, மலேசியா-சிங்கப்பூர் 2ஆவது லிங்க் நெடுஞ்சாலை, 2ஆம் கட்ட கிழக்கு கரை நெடுஞ்சாலை, சிரம்பான் போர்ட்டிக்சன் நெடுஞ்சாலை, பட்டவொர்த்- கூலிம் நெடுஞ்சாலை மற்றும் பினாங்கு பாலம் ஆகியவையே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைகளாகும்.


Pengarang :