ECONOMYNATIONALSELANGOR

கோவிட்-19 தடுப்பூசிகளை வாங்கும் சிலாங்கூர் அரசின் திட்டத்திற்கு மத்திய அரசு வரவேற்பு

ஷா ஆலம், , ஜன 19-  சிலாங்கூர் மாநில மக்களின் தேவைக்காக 50 லட்சம் கோவிட்-19 தடுப்பூசிகளை வாங்கும் மாநில அரசின் திட்டத்தை மத்திய அரசும் சுகாதார அமைச்சும் வரவேற்றுள்ளன.

மக்களின் நலனுக்காக தடுப்பூசிகளை விநியோகம் செய்வதில் மத்திய அரசு எதிர்நோக்கி வரும் சுமையைக் குறைப்பதில் மாநில அரசின் இந்நடவடிக்கை பெரிதும் துணை புரிவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அண்மையில் கூடிய அவசரகால நிலை தொடர்பான தேசிய பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் பிரதமரிடம் இந்த முடிவு குறித்து எடுத்துரைக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

தடுப்பூசித் திட்டம் இலக்கை அடைவதை உறுதி செய்வதற்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் இரு தடுப்பூசி திட்டங்களால் குழப்பம் ஏற்படுவதை தடுப்பதற்கும் ஏதுவாக தேசிய நிலையிலான தடுப்பூசி திட்டத்தில் தாங்கள் இணைந்து செயல்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்காற்றி வரும் தொழிலாளர்கள் மற்றும் இலக்காக கொள்ளப்பட்ட தரப்பினருக்கு இந்த தடுப்பூசி கிடைப்பதை மாநில அரசு உறுதி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடர்பில் வரும் புதன் கிழமை வெளியிடவுள்ள முக்கிய அறிவிப்பில் ஆகக்கடைசி மேம்பாடுகள் குறித்து தாம் அறிவிப்புகளை வெளியிடவுள்ளதாகவும் அவர் சொன்னார்.

மாநில மக்கள் மற்றும் முக்கியத் துறைகளில் பணியாற்றும் அந்நியத் தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக ஐம்பது லட்சம் கோவிட்-19 தடுப்பூசிகள் வரை வாங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக மந்திரி புசார் கடந்த வாரம் அறிவித்தார்.

 


Pengarang :