Malaysia, Penang, Thaipusam, Hindu, religious, festival, people, silver chariot,
NATIONALSELANGOR

தைப்பூச இரத ஊர்வலத்தில் பக்தர்கள் ஒன்று கூட வேண்டாம்- அமைச்சர்  நினைவுறுத்து

கோலாலம்பூர், ஜன 26– தைப்பூச விழாவையொட்டி நடைபெறும் இரத ஊர்வலத்தில் பக்தர்கள் கலந்து கொள்ளக்கூடாது என்பதோடு இரதத்தைக் காண சாலையோரம் ஒன்று கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவுறுத்தியுள்ளார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் அமலாக்கம் காரணமாக இந்த நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக அவர் கூறினார். இரதம் செல்லும் வழியில் பக்தர்கள் ஒன்று கூடுவதைத் தடுக்க போலீசார் ஆங்காங்கே நிறுத்தப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.

அனைவரும் எஸ்.ஓ.பி.எனப்படும் சீரான நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றி நடப்பர் என நம்புகிறோம். இதன் வழி யார் மீதும் நடவடிக்கை எடுக்கும் சூழல் ஏற்படாமல் இரத ஊர்வலம் சமூகமான முறையில் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

தைப்பூசத்தை முன்னிட்டு வெள்ளி இரதம் தலைநகர், ஜாலான் துன் எச்.எஸ் லீ, ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து நிர்ணயிக்கப்பட்ட சாலைகள் வழியாக பத்து கேவ்ஸ், ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு ஊர்வலமாகச் செல்ல அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. எனினும், இந்த ஊர்வலத்தில் பத்துக்கும் குறைவானோர் மட்டுமே பங்கேற்க முடியும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

வரும் 27 ஆம்  தேதி அதிகாலை 3.00 மணிக்கு வெள்ளி இரதம் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்டு பத்துமலைத் திருத்தலம் வந்தடைவதற்கும் வெள்ளிக் கிழமை அதே நேரத்தில் இரதம் மீண்டும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் திரும்புவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

சாலைகளில் வாகன மற்றும் மக்கள் நடமாட்டம் குறைந்தும் வர்த்தக நடவடிக்கைகள் மூடப்பட்டும் இருக்கும் என்பதால் இரத ஊர்வலத்திற்கு இந்த அதிகாலை நேரம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே, ஆலயங்களில் தைப்பூசம் தொடர்புடைய எந்த நிகழ்வும் அனுமதிக்கப்படாது என்பதோடு பக்தர்கள் தங்கள் வழிபாட்டு நடவடிக்கைகளை வீட்டிலே நடத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளத் தகவலையும் அவர் வெளியிட்டார்.

ஆலயத்தில் தைப்பூச கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட போதிலும் அங்கு நடைபெறும் பூஜைகளில் கலந்து கொள்ள ஆலய நிர்வாகத்தைச் சேர்ந்த ஐவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

 

 


Pengarang :