unaraj
NATIONALSELANGOR

தைப்பூச இரத ஊர்வலத்திற்கு அனுமதி- பாகுபாடு வேண்டாம் – குணராஜ்

ஷா ஆலம், ஜன 28– தைப்பூச இரத ஊர்வலத்திற்கு அனுமதி வழங்குவதில் பாகுபாடற்ற நிலைப்பாட்டை தேசிய பாதுகாப்பு மன்றம் எடுக்க வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் வலியுறுத்தியுள்ளார்.

இந்நாட்டில் தைப்பூச விழா பத்துகேவ்ஸ், ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் மட்டுமின்றி நாட்டின் பல ஆலயங்களில் விமரிசையாக கொண்டாடப்படுவதால் இவ்விழாவையொட்டி நடைபெறும் இரத ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கும் விஷயத்தில் தேசிய பாதுகாப்பு மன்றம் சமய சார்ந்த அமைப்புகளின் ஆலோசனையைப் பெறுவது அவசியம் என்று அவர் கூறினார்.

நாட்டில் இந்துக்களால் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் விழா தைப்பூசம் ஆகும். இவ்விழாவுக்கு அதிக பக்தர்கள் கூடும் இடமாக பத்துமலைத் திருத்தலம் விளங்குகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு 27ஆம் தேதி  வெள்ளி இரதம் தலைநகர், ஜாலான் துன் எச்.எஸ்.லீ. ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து ஊர்வலமாகச் சென்று பத்துமலைத் திருத்தலத்தை அடைவதற்கும் 29 ஆம் தேதி  பத்துமலைத் திருத்தலத்திலிருந்து மீண்டும் தலைநகர், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் திரும்புவதற்கும் எஸ்.ஓ.பி. நிபந்தனைகளுடன் தேசிய பாதுகாப்பு மன்றம் அனுமதி அனுமதி அளித்துள்ளதை நான் வரவேற்கிறேன்.

எங்களின் கேள்வி என்னவென்றால், மற்ற பல ஆலயங்களும் தைப்பூச விழாவை விமரிசையாக கொண்டாடும் போது பத்துமலை தேவஸ்தானத்திற்கு மட்டும் ஏன் இந்த அனுமதி வழங்கப்பட்டது என்பதுதான்.

பொதுமக்கள் நலன் சார்ந்த விவகாரங்களில் முடிவெடுப்பதற்கு முன்னர் தேசிய பாதுகாப்பு மன்றம் வெளிப்படையான போக்கை கடைபிடிக்க வேண்டும். மாநிலத்தில் மற்ற ஆலயங்களும் தைப்பூச விழாவைக் கொண்டாடும் போது ஒரு ஆலயத்திற்கு மட்டும் அனுமதியளித்தது ஒரு தலைப்பட்சமான  முடிவாக கருதப்படுகிறது என்று கோத்தா ராஜா கெஅடிலான் தொகுதி தலைவருமான அவர் தெரிவித்தார்.

சரவா மாநிலத்தின் நிவாசகர் ஆலயம், பினாங்கு, அருள்மிகு பால தண்டாயுதபாணி ஆலயம், ஜோகூர், ஸ்ரீ  முனீஸ்வரர் மற்றும் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம், ஈப்போ, கூனோங் செரோ, ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் ஆகியவையும் தைப்பூச விழாவை விமரிசையாக கொண்டாடுகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆலய விவகாரங்களுடன் தொடர்புடைய தரப்பினருடன் கலந்தாலோசிக்காமல் தைப்பூச விடுமுறையை ரத்து செய்த கெடா மாநில பாஸ் அரசாங்கத்தின் செயலை தேசிய பாதுகாப்பு மன்றம் ஒரு படிப்பினையாக கொள்ள வேண்டும்.  கெடா அரசாங்கத்தின் இந்த முடிவை எதிர்த்து பல தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகள் நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் சூழலை உருவாக்கியது.

மலேசியாவிலுள்ள அரசு சார்பற்ற இந்து அமைப்புகளை பிரதிநிதிக்கும் தைப்பூச பணிக்குழுவுடன் இவ்விவகாரம் குறித்து தேசிய பாதுகாப்பு மன்றம் முன்னதாக விவாதித்திருக்க வேண்டும் என்பது எங்கள் கருத்தாகும். இவ்விவகாரம் தொடர்பில் விரிவான மற்றும் பாகுபாடற்ற முடிவை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருடனான பேச்சு வார்த்தை மிக முக்கிய பங்கை ஆற்றும்.

பத்துலை திருத்தலத்திற்கு அனுமதிக்கப்பட்டதைப் போல் மற்ற ஆலயங்களுக்கும் எஸ்.ஓ.பி. நிபந்தனைகளுடன் இரத ஊர்வலம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாகும் என்று குணராஜ் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

 


Pengarang :