NATIONALSAINS & INOVASISELANGOR

மேப்ஸ் தனிமைப்படுத்தும் மையம் மருத்துவமனைகளின் சுமையைக் குறைக்க உதவும்- மந்திரி புசார் நம்பிக்கை

ஷா ஆலம், ஜன 19- கோவிட்-19 நோய்த் தொற்று தாக்கம் குறைவாக உள்ளவர்களுக்கான தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை மையம் (பி.கே.ஆர்.சி.) மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையை பெரிதும் குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செர்டாங் மலேசிய பல்கலைக்கழக கண்காட்சி  பூங்காவில் (மேப்ஸ்) செயல்படும் அந்த மையத்தில் 9,000 கட்டில்கள் உள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சுகாதார அமைச்சு, நட்மா எனப்படும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் மற்றும் இதர அரசு துறைகளின் மேற்பார்வையில் செயல்படும் இந்த  மையம் கோவிட்-19 ஒருங்கிணைந்த சிகிச்சை மையமாகவும் விரிவாக்கம் கண்டு வருகிறது என்று அவர் சொன்னார்.

பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய நாட்டின் முதலாவது தனிமைப்படுத்துதல் மற்றம் சிகிச்சை மையமாக இது விளங்குகிறது. மருத்துவமனைகள் எதிர்நோக்கி வரும் சுமையை இதன் மூலம் குறைக்க முடியும் என்ற நம்பிக்கையும் ஏற்படுகிறது என்றார் அவர்.

மாநில அரசு தலைமைச் செயலாளர் டத்தோ முகமத அமின் அகமது ஆயாவுடன் மேப்ஸ் ஒருங்கிணைந்து மையத்திற்கு வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் ஷஹாரி ஙகாடிமான், மேப்ஸ் பி.கே.ஆர்.சி .2.0 மையத்தின் இயக்குநர் ஷஹாபுடின் இப்ராஹிம் ஆகியோரும் மந்திரி புசாரின் இந்த பயணத்தில் உடனிருந்தனர்.

கடந்தாண்டு மார்ச் மாதம் திறக்கப்பட்ட இந்த மையம் கடந்த ஜூலை மாதம் மூடப்பட்டது. எனினும் பி.கே.ஆர்.சி. மேப்ஸ் 2.0 எனும் பெயரில் அது கடந்த டிசம்பர் 6ஆம் தேதி  மீண்டும் திறக்கப்பட்டது.

இம்மாதம் 24ஆம் தேதி முதல் கோவிட்-19 மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஒருங்கிணைந்த மருத்துவமனையாக இம்மையம் செயல்படவிருக்கிறது. இங்கு சிகிச்சைப் பெறுவோரின் நிலை சீரடைந்தவுடன் அடுத்தக் கட்ட சிகிச்சைக்காக அவர்கள் மருத்துவனைகளுக்கு அனுப்பப்படுவர்..


Pengarang :