NATIONALSELANGOR

மத்திய அரசிடமிருந்து  78,000 தடுப்பூசிகளை சிலாங்கூர் பெற்றது

ஷா ஆலம், பிப் 24- மத்திய அரசிடமிருந்து 78,000 சொட்டு பைசர்-பயோன்டெக் தடுப்பூசிகளை சிலாங்கூர் பெற்றுள்ளது. இந்த தடுப்பூசிகளைச் செலுத்துவதில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இலக்கு நிர்ணயிக்கப்பட்ட அல்லது முக்கியத்துவம் வாய்ந்த தரப்பினருக்கு இந்த தடுப்பூசிகள் கட்டங் கட்டமாக பகிர்ந்தளிக்கப்படும் என்று சுகாகாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட்  கூறினார்.

மாநிலத்தில்  முன்களப் பணியாளர்களின் எண்ணிக்கை மட்டும் 40,000கும் அதிகமாக உள்ளதால் இந்த தடுப்பூசித் திட்டத்தில் யாருக்கு முக்கியத்துவம் அளிப்பது என்பது தொடர்பில் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த தடுப்பூசித் திட்டம் நியாயமான முறையில் மேற்கொள்ளப்படும் எனக்கூறிய அவர், இவ்விவகாரத்தில் பொதுமக்கள் தங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதோடு தங்களுக்கான தருணம் வரும்வரை காத்திருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

நேற்று முன்தினம், 321,390 பைசர்-பயோன்டெக் கோவிட் தடுப்பூசிகள் பெல்ஜியம் நாட்டிலிருந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்தன.

இந்த தடுப்பூசித் திட்டத்தில் முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அவர்களைத் தொடர்ந்து மூத்த குடிமக்கள், நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் வரிசைக் கிரமமாக தடுப்பூசிகளைப் பெறுவர்.

பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் நாட்டின் முதல் நபராக கோவிட்-19 தடுப்பூசியைப் பெறுவார். அவரைத் தொடர்ந்து சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லாவுக்கு அந்த ஊசி செலுத்தப்படும்.


Pengarang :