ALAM SEKITAR & CUACANATIONAL

நாட்டில் நிலவும் கடுமையான பருவநிலை வழக்கத்திற்கு மாறானது அல்ல- வானிலை ஆய்வுத் துறை கூறுகிறது

கோலாலம்பூர், ஏப் 14- தீபகற்ப மலேசியாவின் மேற்குகரை பகுதிகளில் தற்போது பெய்து வரும் இடி மின்னலுடன் கூடிய அடை மழை வழக்கத்திற்கு மாறானதோ அல்லது கடுமையான வானிலையின் அறிகுறியோ அல்ல என்று வானிலை ஆய்வுத் துறை கூறியது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பருவ மழை மாற்றம் காரணமாக மாலை அல்லது இரவு வேளைகளில் சிறிது நேரத்திற்கு கனத்த மழை அல்லது இடி,மின்னல் ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும் அத்துறையின் இயக்குநர் ஜைலான் சைமன் கூறினார்.

ஒவ்வோராண்டும் புயல் ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும். இடி, மின்னல் தவிர்த்து கடும் புயல் காரணமாக கட்டிடங்களுக்கு சேதமும் மரங்கள் சாய்வதற்கான சாத்தியமும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய வானிலை கடுமையானதாக உள்ளது என்று கூறுவதற்கில்லை. காரணம், தலைநகரில் நேற்று ஏற்பட்டதைப் போன்ற புயல் சம்பவம் ஏற்கனவே நிகழ்ந்துள்ளது என்றார் அவர்.

நேற்று மாலை தலைநகரில் பெய்த அடை மழை மற்றும் கடும் புயல் காரணமாக பல இடங்களில் வெள்ளமும் பொருள் சேதமும் ஏற்பட்டது தொடர்பில் அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

இடி மின்னல் மற்றும் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் காற்றினால் மரங்கள் சாய்வதற்கும் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படுவதற்கும் சாத்தியம் உள்ளதாக ஜைலான் கூறினார்.

இந்த மோசமான பருவநிலை அடுத்த சில தினங்களுக்கு நீடிக்கும் எனக்கூறிய அவர், அடுத்த வாரத்தில் இதன் தாக்கம் தணியத் தொடங்கும் என்றார்.


Pengarang :