SELANGOR

மணல் நடவடிக்கை அனுமதிக்கு கடும் விதிமுறைகள்

ஷா ஆலம், டிசம்பர் 8:

மணல் தொடர்பிலான நடவடிக்கைகளுக்கு மேற்கொள்ளப்படும் விண்ணப்பங்கள் மீதிலான விதிமுறை கடுமையாக்கப்பட்டு இருப்பதால் அது குறித்த செயல்பாடுகளும் நடவடிக்கைகளும் ஆக்கப்பூர்வமானதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.கடந்த 2008ஆம் ஆண்டு முதல் கும்புலான் செமெஸ்தா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு வரும் அந்த அனுமதியால் சிலாங்கூரில் மணல் செயல்பாடுகள் நன் முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

மணல் தொடர்பிலான அனைத்து குத்தகைகளும் வெளிப்படையான குத்தகை விண்ணப்பங்களோடு அதன் செயல்முறை இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு நிறுவனமும் மேற்கொள்ளும் மணல் நடவடிக்கைகளை மாநில அரசாங்கத்தின் துணை நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணித்தும் அதன் முறைப்படுத்தியும் வருவதாக சிலாங்கூர் மாநில நிலம் மற்றும் தாதுகளின் தலைமை இயக்குநர் அமாட் சுஹய்டி அப்துல் ரஹீம் கூறினார்.மாநில அரசாங்கத்தின் இந்த விவேகமான செயல்பாடுகளால் மணல் தொடர்பிலான வருமானமும் பெரும் மடங்கு உயர்ந்திருப்பதாகவும் கூறினார்.

கடந்த 2008ஆம் ஆண்டுக்கு முன்னர் 5 மில்லியன் முதல் 7 மில்லியன் வரையில் இருந்த வருமானம் நடப்பில் 20 மில்லியன் வரை எட்டியிருப்பதாகவும் நினைவுறுத்தினார்.
கும்புலான் செமெஸ்தா மட்டுமின்றி பிற தனியார் நிறுவனங்களும் மணல் தொடர்பிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மாநில அரசு அனுமதி வழங்குவதாகவும் கூறிய அவர் சம்மதப்பட்ட நிலம் சுமார் 20 ஏக்கர்களுக்கும் கூடுதலாக இருத்தல் வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காண்பித்தார்.இருப்பினும்,கும்புலான் செமேஸ்தாவின் நடவடிக்கைகள் சிறப்பாகவும் அதேவேளையில் நிறைவு அளிக்கும் வகையிலும் இருப்பதாக கூறிய அவர் அந்நிறுவனம் ஆற்றலும் அனுபவமும் கொண்டிருப்பது பெரும் சாத்தியமாக விளங்குகிறது.
மணல் தொடர்பிலான அனுமதியை கும்புலான் செமேஸ்தா மூலம் கையகப்படுத்தியிருந்தாலும் அது தொடர்பிலான விதிமுறை மற்றும் அணுகுமுறையில் மாநில அரசாங்கம் முன்னெடுத்து வரும் நிலையில் தொழில்நுட்ப துறையின் அனுமதியையும் அஃது பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த தொழில்நுட்ப துறையில் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் இலாகா,நீர்வடிகால் மற்றும் பாசனம் இலாகா,சிலாங்கூர் மாநில நீர் வாரியம் ஆகியவையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில், கும்புலான் செமேஸ்தாவிற்கு சகல உரிமையும் அனுமதியும் வழங்கியிருந்தாலும் அஃது முழுமையான செயல்பாட்டையும் தகுதியினையும் பெற்றிருக்க வேண்டும்.இங்கு யாருக்கும் சிறப்பு அதிகாரமும் அனுமதியும் இல்லை என்றார்.மாநில அரசாங்கத்தின் விதிமுறைக்கு அந்நிறுவனமும் உட்ப்ட்டதே என்றும் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், மணல் திருட்டு தொடர்பில் கருத்துரைத்த அவர் இதனை கடுமையாக கருதுவதாகவும் அதற்கு எதிரான நடவடிககைகள் துள்ளியமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார். கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் மணல் திருட்டு மிகவும் அரிதாகவே காணப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.

#வீரத் தமிழன்


Pengarang :