NATIONAL

14வது பொதுத் தேர்தல்: அம்னோ-பிஎன் புதிய எல்லை மறுசீரமைப்பை பயன்படுத்துவது சாத்தியமில்லை!!!

ஷா ஆலம், ஜனவரி 4:

எதிர் வரும் 14-வது போதுத் தேர்தலில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட புதிய தொகுதி எல்லை பரிந்துரைகளை அம்னோ தேசிய முன்னணி அமல்படுத்துவதற்கு வாய்ப்புகள் குறைவு என்று ஸ்ரீ மூடா சட்ட மன்ற உறுப்பினர் சுஹாய்மி ஷாபியி கூறினார். அரசியலமைப்பு விதிகளின்படி மலேசிய தேர்தல் ஆணையத்திற்கு இதை அமல்படுத்த  கால அவகாசம் இல்லை என்று நினைவு படுத்தினார்.

”  தேர்தல் ஆணையம் பொது மக்களின் தொகுதி எல்லை மறுசீரமைப்பு கண்டனங்களை செவிமடுக்கும் நடவடிக்கை 92 நாட்கள் எடுக்கும். அதைத் தொடர்ந்து இரண்டாவது பட்டியல் வெளியிடப்பட ஒரு மாதம் ஆகும். ஆக இதுவே நான்கு மாதங்கள் எடுக்கும். இதையடுத்து, பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பிறகு, செனட் சபைக்கு கொண்டு ஒப்புதல் பெற வேண்டும். இறுதியாக மேன்மை தங்கிய மாமன்னர் கையொப்பம் இட ஏறக்குறைய மொத்தம் ஐந்து மாதங்கள் பிடிக்கும்,” என்று கொன்கோர்ட் தங்கும் விடுதியில் நடைபெற்ற புதிய எல்லை மறுசீரமைப்பு கண்டன பொது செவிமடுக்கும் நடவடிக்கைக்கு பிறகு செய்தியாளர்களிடம் சுஹாய்மி  பேசினார்.

இதனிடையே, ஸ்ரீ அண்டாலாஸ் சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் 14-வது பொதுத் தேர்தல் நோன்பு மாதத்திற்கு முன்பு நடக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இதனால் மலேசிய தேர்தல் ஆணையம் 14-வது பொதுத் தேர்தலில் புதிய எல்லை மறுசீரமைப்பு பரிந்துரைகளை பயன்படுத்த இயலாது என்று விவரித்தார்.

 

 

 

 

 

#தமிழ் அரசன்


Pengarang :