NATIONAL

மேடான் இம்பி நில விவகாரம் : ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார்

புத்ரா ஜெயா, ஜன.23:

புக்கிட் பிந்தாங் மேடான் இம்பி பகுதியில் மத்திய அரசாங்கத்துக்கு சொந்தமான இரண்டு லோட் நிலத்தில் அத்துமீறிய ஆக்கிரமிப்பு தொடர்பில் கூட்டரசு பிரதேச அமைச்சு அலுவலகம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் ஒன்றை சமர்ப்பித்தது.

சம்பந்தப்பட்ட நிலத்தில் கட்டடம் ஒன்றை எழுப்ப அனுமதி வழங்கியதில் அதிகார துஷ்பிரயோகம் ஏதேனும் நடந்துள்ளதா என்பதை விசாரனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் கூடிய புகார் மனுவை ஊழல் தடுப்பு ஆணையத்திடம் வழங்கியதாக கூட்டரசு பிரதேச அமைச்சின் சிறப்பு நடவடிக்கை பிரிவு அதிகாரி ஸுல்ஹாஸ்மி ஷாரிஃப் கூறினார்.

கோலாலம்பூர் மாநகர் மன்றம் அல்லது சம்பந்தப்பட்ட மேம்பாட்டாளருக்கு சொந்தமில்லாத அந்த நிலத்தில் கட்டடம் நிர்மாணிக்கும் அனுமதியை மாநகர் மன்றம் அளித்தது சந்தேகத்திற்கு இடமளிக்கும் விவகாரமாக உள்ளது.

இந்த விவகாரத்தில் மேம்பாட்டு நிறுவனத்திடம் இருந்து சம்பந்தப்பட்ட தரப்பு சன்மானம் அல்லது கையூட்டு பெற்றிருக்கும் சாத்தியம் உள்ளதாக அவர் சொன்னார்.

இவ்விவகாரம் தொடங்கியது முதல் இன்று வரை நடந்த நிகழ்ச்சிகளின் தொகுப்பு,, டிபிகேஎல் மீது நேர்மை துறை வெளியிட்ட அறிக்கை, இந்நிலத்தை காலி செய்ய கூட்டரசு பிரதேச நிலம் மற்றும் இயற்கை வள அலுவலகம் வழங்கிய அறிக்கை ஆகியவற்றோடு இப்புகார் மனுவையும் தாம் ஆணையத்திடம் ஒப்படைத்ததாக அவர் தெரிவித்தார்.


Pengarang :