NATIONAL

இலவச காலை உணவு திட்டம் பி40 மாணவர்களுக்கு கட்டம் கட்டமாக அமல்படுத்தப்படும் – மஸ்லி மாலிக்

கோலா லம்பூர், டிசம்பர் 1:

அடுத்தாண்டு முதல் குறைந்த வருமானத்தைப் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த (பி40) மாணவர்கள் அதிகம் பயிலும் பள்ளிகளில் இலவச காலை உணவு திட்டம் (பி.எஸ்.பி) கட்டம் கட்டமாக அமல்படுத்தப்படவுள்ளது.

அந்த திட்டத்தை அமல்படுத்தவிருக்கும் தரப்பினர், இன்னும் முழுமையாக தயாராகாததால், அம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கல்வியமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் தெரிவித்துள்ளார்.

கல்வியமைச்சு மேற்கொண்ட பல்வேறு சந்திப்புகளிலும் சில பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட முன்னோடி திட்டங்களிலும், அந்த பி.எஸ்.பி. திட்டத்தில் இடம்பெற்றுள்ள பள்ளி நிர்வாகங்கள், சிற்றுண்டிச்சாலைகள், பெற்றோர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் (பி.ஐ.பி.ஜி) முதலானவை இன்னும் தயாராகாதது தெரிய வந்துள்ளது.

அதனால், அந்த திட்டத்தை முதல்கட்டமாக பி40 பிரிவைச் சேர்ந்த அதிக மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் அமல்படுத்துவதற்கு பொருளாதார நடவடிக்கை மன்றம் பரிந்துரைத்துள்ளதாக மஸ்லீ மாலிக் வியாழக்கிழமை மக்களவையில் கூறியுள்ளார்.

மேலும், மிகப் பெரிய திட்டமான பி.எஸ்.பி, மாணவர்களுக்கான உணவை மட்டுமே தயார்படுத்தும் திட்டம் அல்ல. மாறாக, மாணவர்களிடையே உணவுக் கழிவுகளை நிர்வகிக்கும் கல்வியையும் கற்றுத் தரவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் 9ஆம் தேதி, நாடு முழுவதிலும் உள்ள 2.7 மில்லியன் மாணவர்களை உட்படுத்திய ஆரம்பப்பள்ளிகளில் பி.எஸ்.பி திட்டத்தை மேற்கொள்வதற்காக, அரசாங்கம் 800 மில்லியன் முதல் 1.6 பில்லியன் ரிங்கிட் வரையில் நிதியை ஒதுக்கீடு செய்திருப்பதாக, மஸ்லீ மாலிக் அறிவித்திருந்தார்.


Pengarang :