NATIONAL

கோவிட்-19: வேலை நீக்கத்தைத் தடுக்க சட்டம் தேவை எம்.டி.யு.சி. வலியுறுத்து

கோலாலம்பூர், செப் 18- தொழிலாளர்களின் வாழ்வுக்கு பாதுகாப்பும் அவர்களுக்கு சிறப்பான ஊதியமும்  அளிக்கும் வகையில் பணியாளர்களை வேலைக்குச் சேர்க்கும் விவகாரத்தில்  ஆக்ககரமான கொள்கை அமல்படுத்தப்பட வேண்டும் என்று மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (எம்.டி.யு.சி.) வலியுறுத்தியுள்ளது.

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து நாடு மீளும் வரை தொழிலாளர்களை முதலாளிகள் வேலை நீக்கம் செய்வதை தடுக்கும் வகையில் அவசரகால பணியமர்த்தும் விதிமுறையை அரசாங்கம் அமல் படுத்த வேண்டும் என்று அத்தொழிற்சங்கத்தின் தலைமைச் செயலாளர் ஜே. சோலமன் கூறினார்.

இந்நடவடிக்கையின் மூலம் தொழிலாளர்களின் வேலை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய முடியும். இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் இது போன்ற பாதுகாப்பைத் தான் தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர் என்றார் அவர்.

கடந்த 2019ஆம் ஆண்டில் சம்பள உயர்வு அறிவிக்கப்பட்ட போதிலும் தொழிலாளர்கள் இன்னும் சிரமத்தில்தான் உள்ளனர். புள்ளி விபரத் துறையின் அறிக்கையில் குறிப்பிட்டப் படி  2019ஆம் ஆண்டில் 4.4 விழுக்காட்டு சம்பள உயர்வு வழங்கப்பட்டிருந்தாலும் அது 137 வெள்ளியை மட்டுமே பிரதிபலிக்கிறது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

கடந்த 2018இல் 3,087 வெள்ளியாக இருந்த சம்பள அளவு கடந்த 2019ஆம் ஆண்டில் 4.4 விழுக்காடு உயர்ந்து 3,224 வெள்ளியாக ஆகியுள்ளதாக மலேசிய புள்ளி விபரத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

இது அறிக்கை குறித்து மேலும் கருத்துரைத்த சோலமன், பொதுவாக தொழிலாளர்கள் குறிப்பாக வாழ்க்கைச் செலவின அதிகரிப்பால் பாதிக்கப்பட்ட நகர்புறங்களைச் சேர்ந்தவர்கள் எதிர்பார்ப்பதை விட இந்த சம்பள உயர்வு மிகவும் குறைவானதாகும் என்று என்று சொன்னார்.


Pengarang :