ECONOMY

துன்புறுத்தலால் குழந்தை மரணம்- பராமரிப்பாளர் உள்பட நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது

ஜோகூர் பாரு, மே 1- துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஒன்பது மாத பெண் குழந்தை இங்குள்ள சுல்தானா அமினா மருத்துவமனையில் கடந்த வாரம் மரணமடைந்தது தொடர்பில் நால்வரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இருபத்தொன்பது முதல் 42 வயது வரையிலான அந்த நால்வரும் கடந்த வியாழக்கிழமை இரவு 10.00 மணியளவில் நகரின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பல்வீர் சிங் மாஹிண்டர் சிங் கூறினார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அந்நிய நாட்டவரான ஒன்பது மாதப் பெண் குழந்தை சித்திரவதைக்கு ஆளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ அதிகாரியிடமிருந்து கடந்த புதன் கிழமை தாங்கள் புகாரைப் பெற்றதாக அவர் சொன்னார்.

அக்குழந்தை சிகிச்சை பலனின்றி மறுநாள் அதிகாலை 3.50 மணியளவில் உயிரிழந்தது. அக்குழந்தையின் மரணத்திற்கு குற்றச் செயல் காரணமாக இருந்திருக்கலாம் என சவப்பரிசோதனையில் கண்டறியப்பட்டது என அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் உள்நாட்டினரான குழந்தை பராமரிப்பாளரும் அவரின் கணவரும் அடங்குவர் எனக் கூறிய அவர், வியட்னாமிய பிரஜை என நம்பப்படும் அக்குழந்தையின் தாயாரைத் தாங்கள் தேடி வருவதாக குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் விசாரணைக்காக கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி ஆறு நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 31(1)(ஏ) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.


Pengarang :