Dato’ Menteri Besar Dato’ Seri Amirudin Shari berucap ketika Sambutan Raya Anak Muda di Bandar Baru Batang Kali, Hulu Selangor pada 30 April 2024. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
ECONOMYMEDIA STATEMENT

ஜூலை மாதத்திற்குள் பரம ஏழ்மை நிலையை ஒழிக்க மாநில அரசு இலக்கு

உலு சிலாங்கூர், மே 1- சிலாங்கூரில் வரும் ஜூலை மாத த்திற்குள் பரம ஏழ்மை நிலையை ஒழிக்க மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மாநிலத்தில் பரம ஏழைகள் பிரிவில் 861 குடும்பங்கள் உள்ளதாக கூறிய அவர், சிலாங்கூர் மாநில மேம்பாட்டு நடவடிக்கை மன்றம் அளித்த விளக்கத்தின் அடிப்படையில் இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

மாதம் 300 வெள்ளி உதவித் தொகை வழங்க வகை செய்யும் பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்தின் கீழ் உபரி நிதியை சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கும்படி மாநில பொருளாதார நடவடிக்கை மன்றம் பணிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

மிக வறிய நிலைலுள்ளவர்களுக்கான பிரிவிலிருந்து விடுபடுவதற்கு ஒரு சிலருக்கு வெறும் 17 வெள்ளி மட்டுமே கூடுதலாக தேவைப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

பரம ஏழ்மைப் பிரிவில் 500க்கும் மேற்பட்ட மலாய்க் குடும்பங்கள் உள்ளன. ஆகவே, பிங்காஸ் உதவித் தொகை மற்றும் ஸக்கத் நிதியைச்  சேர்த்தால் இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என நம்புகிறேன் என்று அவர் கூறினார்.

நேற்றிரவு இங்குள்ள பத்தாங் காலியில் நடைபெற்ற இளைஞர் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

அதிகாரத் துஷ்பிரயோகம் தொடர்பில் பெர்லிஸ் மந்திரி பெசார் முகமது சுக்ரி ரம்லி எம்.ஏ.சி.சி.யின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது குறித்து வினவப்பட்ட போது கோல குபு பாரு இடைத் தேர்தலில் இவ்விவகாரம் பிரசாரத்திற்கான ஆயுதமாக  பயன்படுத்தப்படாது என்று அமிருடின் சொன்னார்.

எம்.ஏ.சி.சி. தனது கடமையைச் செய்யட்டும். எதிராளிகளின் துரதிர்ஷ்டங்களிலிருந்து அரசியல் லாபம் பெற நாங்கள் விரும்பவில்லை என்றார் அவர்.


Pengarang :