ECONOMYSELANGOR

கோவிட்-19 நோய்த் தொற்று காலத்தில் சிலாங்கூரில் 850 கோடி வெள்ளி முதலீடு

ஷா ஆலம், அக் 15- இவ்வாண்டிற்கான முதலீட்டு மதிப்பை சிலாங்கூர் அரசாங்கம் 850 கோடி வெள்ளியாக மறு நிர்ணயம் செய்துள்ளது. கடந்த ஜனவரில் 1,200 கோடி வெள்ளியாக மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

உலக அளவில் பெரும்  பாதிப்பை ஏற்படுத்திய கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக இந்த மதிப்பீட்டின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார மந்த நிலைக்கு மத்தியிலும் முதல் ஆறு மாத காலத்தில் 330 கோடி வெள்ளி மதிப்பிலான 122 முதலீடுகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டதாக முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்

கடந்த மார்ச் மாதம் முதல் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை. அமல்படுத்தப் படாமலிருந்தால் எஞ்சிய 850 கோடி வெள்ளி  மதிப்பிலான முதலீடு சாத்தியமாகியிருக்கும் என்று அவர்  சொன்னார்.

இன்று ஆன் லைன் எனப்படும் இயங்கலை வாயிலாக நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்தாண்டில் 1,700 கோடி வெள்ளி முதலீட்டை ஈர்த்ததன் வழி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக பங்களிப்பை வழங்கும் மாநிலம் என்ற பெயரை கடந்த சில ஆண்டுகளாக தக்கவைத்து வந்துள்ளது என்றார் அவர்.

கடந்த 2018ஆம் ஆண்டில் சிலாங்கூர் 1,870 கோடி வெள்ளி  முதலீட்டை பதிவு செய்தது. கடந்த 30 ஆண்டுகளில் பதிவான முதலீடுகளில் இதுவே மிக அதிகமானதாகும்.

 

 

 

 


Pengarang :