ECONOMYSELANGOR

கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட சுற்றுலா துறையினருக்கு வெ.1,000 உதவித் தொகை

ஷா ஆலம், நவ 20- கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட சுற்றுலாத் துறையைச் சேர்ந்த 553 பேருக்கு உதவித் தொகையாக தலா ஆயிரம் வெள்ளியை சிலாங்கூர் அரசு வழங்குகிறது. இந்த தொகை ஒரு தடவை மட்டுமே வழங்கப்படும்.

உரிமம் பெற்ற 486 சுற்றுலா பேருந்து ஓட்டுநர்கள், 16 கிராம தங்கும் விடுதி சேவை நடத்துநர்கள்  மற்றும் 51 சமூக உபசரிப்பாளர்கள் ஆகியோருக்கு  இந்த உதவித் தொகை வழங்கப்படுவதாக சுற்றுலாத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹி லோய் சான் கூறினார்.

இந்த தொகை இம்மாதம் 30ஆம் தேதிக்கு முன்னதாக சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த உதவித் தொகையை வழங்குவதற்காக 553,000 வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பொருளாதார பாதிப்பிலிருந்து மீள்வதற்கு இந்த தொகை ஓரளவு துணை புரியும் என்றார் அவர்.

இங்குள்ள பொருளாதார நடவடிக்கை மன்ற மாநாட்டு அறையில் நடைபெற்ற சுற்றுலாத் துறை சார்ந்தவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

சுற்றுலாத் துறையைச் சேர்ந்தவர்களின் நிதிக் கையிருப்பு ஒன்று முதல் ஆறு மாத காலத்திற்கு மட்டுமே தாக்குப்பிடிக்கும் என்பதை டூரிசம் சிலாங்கூர் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அடுத்தாண்டில் சுற்றுலாத் துறைக்கு உத்வேகம் அளிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை  மாநில அரசு எடுத்து வருவதாகவும் அதற்குள் கோவிட்-19 பெருந்தொற்று முடிவுக்கு வரவேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றும் அவர் சொன்னார்.


Pengarang :