ECONOMYSELANGORTOURISM

சுற்றுலா துறையை வலுப்படுத்த 10,000 பற்றுச் சீட்டுகள் விநியோகம்- சிலாங்கூர் அரசு நடவடிக்கை

ஷா ஆலம், நவ 20-  சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 200 வெள்ளி மதிப்புள்ள 10,000 பற்றுச் சீட்டுகளை சிலாங்கூர் மாநில அரசு அடுத்த மாத மத்தியில் விநியோகிக்கவிருக்கிறது.
இந்த பற்றுச் சீட்டுகளை இ-டொம்பேட், டச் அண்ட் கோ, லஸாடா போன்ற மின் பயனீட்டுத் தளங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்று சுற்றுலா துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.
இந்த பற்றுச் சீட்டுகளை சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஹோட்டல்கள், அனுமதி பெற்ற கிராம தங்கும் விடுதிகள் மற்றும் சுற்றுலா மையங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் மேலும் சொன்னார்.
இந்நடவடிக்கையின் வழி மலேசியர்கள் சிலாங்கூருக்கு அதிகளவில் சுற்றுலா மேற்கொள்வதை ஊக்குவிக்கும் அதேவேளையில் கோவிட்-19 நோய்த் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட சுற்றுலா துறைக்கும் உத்வேகம் அளிக்கவும் முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நலிவடைந்த நிலையில் இருக்கும் சுற்றுலா துறை சார்ந்தவர்களுக்கு உதவி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் அடிப்படையில் உள்ளூர் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபடவிருக்கிறோம் என்றார் அவர்.
சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக “ஓய்வெடுக்க விரும்பமா? சிலாங்கூரை முதலில் வலம் வாருங்கள்” எனும் இயக்கத்தை டூரிசம் சிலாங்கூர் அமைப்பு அடுத்தாண்டு தொடக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Pengarang :