ECONOMYPBTSELANGOR

ரவாங் ஆற்றோரம் உள்ள 8 சட்டவிரோத தொழிற்சாலைகளை உடைக்கும் பணி தொடங்கியது

ரவாங், நவ 25-  இங்குள்ள கம்போங் லீ கிம் சாய் அருகே சுங்கை ரவாங் ஆற்றோரம் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் 8 தொழிற்சாலைகளை உடைக்கும் பணி இன்று தொடங்கியது.

இன்று காலை தொடங்கிய அந்த நடவடிக்கையில் ஆறு கனரக வாகன பழுது பார்ப்பு 
பட்டறைகளும் இரண்டு மறுசுழற்சி தொழிற்சாலைகளும் இலக்காக கொள்ளப்பட்டதாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அரசாங்க நிலத்தை அனுமதியின்றி ஆக்கிரமித்த குற்றத்திற்காக தேசிய நிலச் 
சட்டத்தின் 425 வது பிரிவின் கீழ் அத்தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை 
எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

ஆற்று நீரை மாசுபடுத்தும் சாத்தியம் உள்ள தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை 
எடுக்கும்படி செலாயாங் நகராண்மைக் கழகமும் கோம்பாக் மாவட்ட நில அலுவலகமும் பணிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் இரு கனரக வாகன பழுது பார்ப்பு 
பட்டறைகள் உடைக்கப்பட்டன. எஞ்சிய ஆறு தொழிற்சாலைகள் வரும் வாரங்களில் 
உடைக்கப்படும் என்றார் அவர்.

இங்குள்ள செலாயாங் நகராண்மைக் கழக தலைமையகத்தில் நடைபெற்ற சட்டவிரோத தொழிற்சாலைகளை உடைப்பது தொடர்பான விளக்கமளிப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

ஆற்றோரம் உள்ள சட்டவிரோத தொழிற்சாலைகளை உடைக்கும் நடவடிக்கை இதர மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படுமா என வினவப்பட்டபோது, இந்நடவடிக்கை 
கட்டங் கட்டமாக விரிவுபடுத்தப்படும் என்று அவர் பதிலளித்தார்.

அதிகமான ஆற்றுத் தூய்மைக்கேட்டுச் சம்பவங்கள் ரவாங் மற்றும் செலாயாங் 
பகுதிகளில் நிகழ்வதால் இப்பகுதியை மையமாகக் கொண்டு நடவடிக்கையை 
தொடக்கியுள்ளோம். இதன் பின்னர் மற்ற இடங்களிலும் நடவடிக்கையை 
தொடர்வோம் என்றார் அவர்.


Pengarang :