Hee Loy Sian menunjukkan kesan paras air pada dinding di sebuah kediaman di Taman hijau, Kajang pada 19 Julai 2020. Foto REMY ARIFIN/SELANGORKINI
ECONOMYSELANGORSELANGORYB ACTIVITIES

நீர் தூய்மைக்கேட்டுக்கு காரணமானவர்களுக்கு ஆயுள் தண்டனை- ஆட்சிக்குழு உறுப்பினர் எச்சரிக்கை

ஷா ஆலம், டிச 30–  நீர் வளங்களை வேண்டுமென்றெ மாசுபடுத்துவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் எச்சரித்துள்ளார்.

இத்தகைய குற்றங்களைப் புரிந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விஷயத்தில் சம்பந்தப்பட்டவரின் சமூக அந்தஸ்து மற்றும் பெற்றிருக்கும் விருதுகள் ஒரு போதும் கருத்தில் கொள்ளப்படாது என்று அவர் சொன்னார்.

குற்றவியல் சட்டத்தின் (சட்டம் 574) 124கே பிரிவின் கீழ் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுங்கை சிலாங்கூர் மற்றும் சுங்கை லங்காட் ஆறுகளை மாசுபடுத்த முனைவோருக்கு ஒரு விஷயத்தை நினைவுப்படுத்த விரும்கிறேன். அத்தகையச் செயலைப் புரிவதற்கு முன்னர் நன்கு யோசித்து முடிவெடுங்கள். இப்போது நாங்கள் கடுமையான சட்டங்களை அமல்படுத்தவிருக்கிறோம். குற்றம் புரிந்தவர்கள் ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டி வரும் என்றார் அவர்.

இங்கு நடைபெற்ற நிகழ்வொன்றில் கிறிஸ்துவ சமய அமைப்புகளுக்கு நிதியதவி வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த நவம்பர் மாதம் 2ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை சுங்கை சிலாங்கூரில் நீர் மாசுபடுவதற்கு காரணமாக இருந்த இருவர் இந்த சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் சொன்னார்.

இந்த கடுமையான சட்டத்தை அமல்படுத்துவதற்கு சட்டத்துறைத்  தலைவரின் அனுமதி கிடைத்துள்ளதாக கூறிய அவர், இச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் நாட்டின் முதலாவது சம்பவம் இதுவாகும் என்றார்.

தொடக்கத்தில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 430வது பிரிவு பயன்படுத்தப்பட்டது. எனினும், கீழறுப்புச் செயல் இதில் சம்பந்தப்பட்டுள்ளதை போலீசார் கண்டறிந்துள்ளதால்  அவ்விருவரும் 547வது சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர் என அவர் கூறினார்.

சிலாங்கூர் நீர் சேவைக்கு எதிராக கீழறுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக நிறுவன இயக்குநர் உள்ளிட்ட இருவர் மீது கடந்த நவம்பர் மாதம் 23ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

கடந்த நவம்பர் மாதம் 2ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை ரவாங், தாமான் வேலொக்சில் இக்குற்றத்தைப் புரிந்ததாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.


Pengarang :