ALAM SEKITAR & CUACASELANGOR

மூன்று வெள்ள நிவாரண மையங்கள் மூடப்பட்டன- 170 பேர் வீடு திரும்ப அனுமதி

ஷா ஆலம், 6 ஜன– வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள்  தங்கியிருந்த  மூன்று வெள்ள நிவாரண மையங்கள் நேற்று மூடப்பட்டன. கோல சிலாங்கூர் மற்றும் உலு சிலாங்கூரில் உள்ள அந்த மையங்களில் 170 பேர் தங்கியிருந்தனர்.

உலு சிலாங்கூரில் உள்ள பாலாய் ராயா கம்போங் பாரு ஏ மற்றும் கம்போங் செக்கோலா பொது மண்டபத்திலும் கோல சிலாங்கூரில் உள்ள ரந்தாவ் பாஞ்சாங் தேசிய பள்ளியிலும் செயல்பட்டு வந்த அந்த நிவாரண மையங்கள் வெள்ள நிலை சீரானதைத் தொடர்ந்து மூடப்பட்டன.

தற்போது கெடாங்சா, கம்போங் அலா பத்து பொது மண்டபத்தில் செயல்பட்டு வரும் நிவாரண மையத்தில் மட்டுமே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 13 பேர் இன்னும் தங்கியுள்ளதாக சிலாங்கூர் மாநில வெள்ள மேலாண்மை பிரிவின் இயக்குநர் முகமது இஸாட் ஹபிக் நாசிர் கூறினார்.

நிச்சயமற்ற வானிலை காரணமாக மீண்டும்  மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதால் வெள்ளத்தை எதிர்கொள்வதற்கான தயார் நிலையில் தாங்கள் உள்ளதாக அவர் சொன்னார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பெய்த அடை மழை காரணமாக ஆறுகளில் நீர் கரைபுரண்டோடி அருகிலுள்ள வீடுகளில் புகுந்ததால் வெள்ள நிவாரண மையங்களில் பலர் தஞ்சம் புகுந்தனர்.


Pengarang :