ALAM SEKITAR & CUACANATIONAL

வடிகால் அமைப்புகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகளே வெள்ளம் ஏற்பட முக்கியக் காரணம்

ஷா ஆலம், ஜன 9: நதிகள் மற்றும் வடிகால் அமைப்புகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகளே கிழக்கு கடற்கரை மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட முக்கியக் காரணமாகின்றன எனச் சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைச்சின் செயலாளரான  டத்தோ ஸ்ரீ  டாக்டர் ஜெய்னி  உஜாங் தெரிவித்தார்.
சில பகுதிகளில் வெள்ளம் விரைந்து வடிகிறது ஆனால், வேறு சில பகுதிகளில் வெள்ளம் வடிய அதிக நாட்களை எடுத்துக்கொள்வதற்கு நதிகள் மற்றும் வடிகால் அமைப்புகளில் மரங்கள், மண் போன்ற குப்பை மற்றும் வெள்ளக் கழிவுகளின் அடைப்புகளே வெள்ள நீர் விரைவாகப் பாய்ந்து ஓடுவதற்குத் தடையாக இருப்பதாகவும், அதனால் வெள்ள நிலைமையை மோசமாக்குகின்றன என்கிறார் அவர்
பொது மக்களின் ஒத்துழைப்பும், நதிகளை நேசிக்கும் பண்பும் மக்களிடையே ஏற்படுத்தினால் மட்டுமே வெள்ளப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு ஏற்படும். இல்லாவிட்டால் பெரிய செலவு ஏற்படுவதுடன் வெற்றிகரமாக வெள்ளம் ஏற்படுவதையும் தடுக்க முடியாது என்றார்.
எல்லா இடங்களிலும் குப்பைகளை வீசக்கூடாது என்பதற்குச் சமூகத்தின் ஒத்துழைப்பு எங்களுக்குத் தேவை, ஏனெனில்  குப்பைகள் வெள்ளம்  ஏற்பட முக்கியக் காரணிகளாகின்றது. அடைபட்ட வடிகால் அமைப்புகளில்  வெள்ள நீரோட்டம் தடைபடுவதால், ஏற்படும் வெள்ளம் மக்களுக்குப் பேரிடராக மாறிவிடுகிறது என்றார் அவர்.
இன்று மேலாண்மை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம் (எம்.எஸ்.யூ) ஏற்பாடு செய்த சுங்கை டாமன்சாரா தேசிய நதி பாதை திட்டத் திட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார், இதில் எம்.எஸ்.யு தலைவர் டான் ஸ்ரீ டாக்டர் மொஹமட் சுக்ரி ஆப் யாஜித் கலந்து கொண்டார்.
2030 க்குள் பொதுமக்களின் பொழுது போக்கு பயன்பாட்டிற்காக ஆற்றங்கரையில் 10,000 கிலோமீட்டர்  பாதையை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை ஆதரிப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும் இத்திட்டம் எனக் குறிப்பிட்டார் ஜெய்னி.
இந்தப் பாதையை உருவாக்குவதன் நோக்கம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் பொது மக்களின் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதாகும், குறிப்பாகத் தேசிய நீர் விநியோக ஆதாரமாக  நதிகளை நாம் மாற்ற வேண்டும் என்றார் அவர்.

Pengarang :