சாலைகளில் பழுது- உடனடி நடவடிக்கை எடுக்கும்படி ஊராட்சி மன்றங்களுக்கு உத்தரவு

ஷா ஆலம், ஜன 11 சிலாங்கூர் மாநிலத்திலுள்ள சாலைகள் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானவையாக உள்ளனவா என்பதை கண்டறியும்படி மாநிலத்திலுள்ள அனைத்து ஊராட்சி மன்றங்களும் பணிக்கப்பட்டுள்ளன.

சாலைகளில் ஏற்பட்டுள்ள பழுது தொடர்பில் பொதுமக்களிடமிருந்து கிடைக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும்படி ஊராட்சி மன்றங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங்  ஹான் கூறினார்.

சாலைகள் பழுதடையும் பிரச்னையை மாநில அரசு கடுமையாக கருதுகிறது. இதன் தொடர்பில் ஊராட்சி மன்றங்களிடம் புகார் அளிக்கும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அவர் சொன்னார்.

விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்வதை தடுப்பதற்காக சாலையைப் பயன்படுத்தும் போது குறிப்பாக மழைகாலங்களில் பயணிக்கும் போது மிகுந்த கவனப் போக்கை கடைபிடிக்கும்படி வாகனமோட்டிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

சாலை ஒருங்கமைப்பை மேம்படுத்துவதற்கும் மாவட்டங்களுக்கிடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கும் ஏதுவாக பொதுப்பணித்துறைக்கு 17 கோடி வெள்ளி ஒதுக்கப்படுவதாக 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்திருந்தார்.


Pengarang :