Perdana Menteri Tan Sri Muhyiddin Yassin ketika pengumuman khas Kerangka Inisiatif Tambahan Khas: Kita Prihatin yang disiarkan secara langsung pada 23 September 2020. Foto: BERNAMA
ECONOMYNATIONAL

ஆறு மாநிலங்களில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை- ஜன 13 முதல் 26 வரை அமல்

கோலாலம்பூர், ஜன 11- கோவிட்-19 நோய்ப் பரவல் அதிகரிப்பை தடுக்கும் நோக்கில்  நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அரசாங்கம் மீண்டும் அமல்படுத்தியுள்ளது. ஆறு மாநிலங்களை உள்ளடக்கிய இந்த ஆணை இம்மாதம் 13ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மூன்று பிரிவுகளாக அமல்படுத்தப்படுவதாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் கூறினார்.

கோலாலம்பூர், புத்ரா ஜெயா, லபுவான் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கூட்டரசு பிரதேசம், சிலாங்கூர், பினாங்கு, மலாக்கா, ஜோகூர் மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள வேளையில் பகாங், பேராக், நெகிரி செம்பிலான், கெடா, திரங்கானு ஆகிய மாநிலங்களில் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படுவதாக அவர் சொன்னார்.

பெர்லிஸ் மற்றும் சரவா ஆகிய மாநிலங்களில் மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல் செய்யப்படுவதாக தொலைக்காட்சி வழி பொதுமக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் தெரிவித்தார்.

வரும் 13ஆம் தேதி பின்னிரவு 12.01 மணி தொடங்கி 14 நாட்களுக்கு அமலில் இருக்கும் இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் பொதுமக்களின் நடமாட்டம் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக தைப்பூசம் உள்பட சமய, விளையாட்டு, கலாசார நிகழ்வுகள், கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.

மாநில மற்றும் மாவட்ட எல்லைகளைக் கடப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. பொருள்களை வாங்குவதற்கு காரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் மட்டுமே செல்ல முடியும்.

உற்பத்தி, கட்டுமானம், சேவை, வர்த்தகம் மற்றும் விநியோகம்,  தோட்டத் தொழில் ஆகிய அத்தியாவசிய துறைகள் மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது.

 

 

 


Pengarang :