ECONOMYPBTSELANGOR

சிலாங்கூரில் விவசாய சந்தைகள் கட்டங் கட்டமாக திறக்கப்படும்

ஷா ஆலம், பிப் 1– சிலாங்கூரிலுள்ள 48 விவசாய சந்தைகளில் 22 சந்தைகள் செயல்படத் தொடங்கி விட்டதாக விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

எஞ்சியுள்ள விவசாய  சந்தைகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் கோவிட்-19 நோய்த் தொற்று நிலவரங்களின் அடிப்படையில் கட்டங் கட்டமாக திறக்கப்படும் என்று அவர் சொன்னார்.

வருமான இழப்பினால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளின் மனகுமுறல்களை மாநில அரசு கேட்டறிந்தது. அவர்கள்  கேட்டுக் கொண்டதற்கிணங்க மேலும் அதிகமான விவசாய சந்தைகளை திறப்பதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்றார் அவர்.

வணிகர்களும் வாடிக்கையாளர்களும் எந்நேரமும் எஸ்.ஓ.பி. விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதோடு அனைவரின் நலன் கருதி கட்டொழுங்கை கடைபிடிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கையாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இங்குள்ள  ஷா ஆலம் ஸ்டேடியம் அருகே விவசாய சந்தையை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மாநிலம் முழுவதும் விவசாய சந்தைகள் முழுமையாக திறக்கப்பட்டவுடன் ஐந்து கோடி வெள்ளிக்கும் அதிகமான வியாபாரத்தை பதிவு செய்ய முடியும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் தினசரி சந்தைகள் மற்றும் விவசாய சந்தைகள் செயல்பட அனுமதிக்கப்படும் என்று பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்  கடந்த 12ஆம் தேதி கூறியிருநதார்.

எனினும், இந்த சந்தைகள் காலை 7.00 மணி முதல் பிற்பகல் 2.00 செயல்பட அனுதிக்கப்படும் என்றும்  பாசார் போரோங் எனப்படும் மொத்த விலை சந்தைகள் பின்னிரவு 12.01 மணி முதல் காலை 6.00 மணி வரையிலும் காலை 11.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையிலும் செயல்பட முடியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

 


Pengarang :