ECONOMYPBTSELANGOR

குழாய்கள், மீட்டர்களை பழுதுபார்க்க 18.6 கோடி வெள்ளி ஒதுக்கீடு

ஷா ஆலம், பிப் 4– குழாய் உடைப்பு போன்ற காரணங்களால் பயனீட்டாளர்களை சென்றடைவதற்கு முன்பே  வீணாகும் நீரின் அளவைக் குறைக்கும் பணிகளுக்காக ஆயர் சிலாங்கூர் நிறுவனம் இவ்வாண்டில் 18 கோடியே 60 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இத்தொகையில் 17 கோடி வெள்ளி பழைய குழாய்களை பழுது பார்ப்பதற்கும் 1 கோடியே 60 லட்சம் வெள்ளி பழைய மற்றும் பழுதடைந்த மீட்டர்களை மாற்றுவதற்கும் பயன்படுத்தப்படும் என்று ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி சுஹாய்மி கமாருள்ஸமான் கூறினார்.

குழாய் உடைப்பை முன்கூட்டியே கண்டறிவதற்கு ஏதுவாக 3,000 விஷேச உபகரணங்கள் முக்கிய குழாய்களில் பொருத்தப்படும். இது தவிர, 60  மாவட்ட மீட்டர் மண்டலங்களில் நிரந்தர குழாய் கசிவு கண்டுபிடிப்பு கருவிகள் பொருத்தப்படும் என்றார் அவர்.

பழைய குழாய்களை மாற்றும் திட்டத்தின் கீழ் 150 கிலோமீட்டர் தொலைவுக்கு அஸ்பேஸ்டோஸ் சிமெண்ட் குழாய்களுக்கு பதிலாக புதிய குழாய்கள் பொருத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.

ஆயர்  சிலாங்கூர் நிறுவனத்தின் இந்த முயற்சி வெற்றியடைவதை உறுதி செய்வதற்காக குறைந்தது 78,000 குழாய் கசிவு சம்பவங்களை குழாய் கசிவு சோதனை நிபுணர்கள் கண்டறிய வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வீணாகும் நீரின் அளவை வரும் 2025ஆம் ஆண்டில் 25 விழுக்காடாகவும் 2049ஆம் ஆண்டில் 15 விழுக்காடாகவும் குறைக்க ஆயர் சிலாங்கூர் நிறுவனம் இலக்கு வகுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Pengarang :