ECONOMYNATIONALSELANGOR

உணவகங்கள் முழுமையாக செயல்பட அனுமதிக்க வேண்டும்

கோலாலங்காட் பிப் 8;- நாட்டின் கோவிட் 19 நோய்த்தொற்றை விட மோசமான அச்சுறுத்தலாக நடமாட்டக் கட்டுப்பாடு விதி முறைகளின் செயல்படுத்தல் அமைந்துள்ளது. அதனால் பெரிய வியாபார ஸ்தலங்களை விடச் சாதாரணத் தொழில் துறைகள் முடங்கி விட்டன, மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கை படகைச் செவ்வனே செலுத்தச் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பதனை அரசாங்கம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டுமென கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவருமான டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார்.

மக்கள் அதிகம் ஒன்று கூடும் பசார் மாலாம் என்னும் இரவு சந்தைகள் திறக்க  அனுமதியளித்துள்ள போது, உணவகங்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு  உண்பதை ஏன் அனுமதிக்கக் கூடாது? உணவு தொழில் மற்றும் உணவகங்கள் பல தொழில்களுக்கு உந்து சக்தியாக விளங்குவதை நாம் மறுக்க முடியாது.

சிறு தொழில்கள் குறிப்பாகச் சேவை அடிப்படையிலான தொழில்களுக்கு ஒரு சந்திப்பு கூடமாக, தொழில்கள் குறித்து விவாதிக்கும் இடமாக, தொழில் அபிவிருத்தி நிதி மற்றும் ஆலோசனை கூடமாக உணவகங்கள் செயல்பட்டு வந்துள்ளதை எவரும் மறுக்க முடியாது. கடந்த காலங்களில் இந் நாட்டில் துவக்கப்பட்ட பல தொழில்களுக்கு ஆரம்பப் புள்ளியாகக் காப்பி கடைகளே விளங்கின என்றால் மிகையாகாது.

அரசாங்கப் புள்ளி விவரங்கள் படி நாட்டின் சேவைத்துறைகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 56 விழுக்காட்டு பங்களிப்பை வழங்கி வருகின்றன. ஆனால் கோலாலம்பூரில் 88.9 விழுக்காடும், சிலாங்கூரில் 58.1 விழுக்காடும், கிளாந்தானில் 74.1 விழுக்காடுமாக மாநிலத்திற்கு மாநிலம் மாறுபட்டுள்ளது.

இது மிகப் பெரிய எண்ணிக்கை, நடமாட்டக் கட்டுப்பாடு விதி முறைகளினால்  ஏற்படுத்தப்பட்டுள்ள தொழில் முடக்கம், மொத்தத் தொழிற்துறை வீழ்ச்சிக்கும் இட்டுச் செல்லும், நாட்டின் மொத்த அழிவுக்கான பாதையாக மாறும் என்பதை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆக, சேவைத்துறை என்ற பொருளாதார எந்திரத்தை மீண்டும் முழு அளவில் செயல்பட அனுமதிக்க வேண்டும். நாடு குறித்து, நாட்டு நடப்பு குறித்து அரசியல்வாதிகள் மட்டும் சிந்திப்பதும், பேசுவதும் போதாது, மக்களும் கலந்துரையாட வேண்டும் அவர்கள் சுதந்திரமாகச் சந்திக்க, சிந்திக்க உணவகங்கள் போன்ற சிறு வியாபார மையங்கள் அதிக இடர்பாடின்றி செயல் பட அனுமதிக்க வேண்டும் என்றார் அவர்.

அரசாங்கத்தின் நடமாட்டக் கட்டுப்பாடு விதிமுறைகள், மக்கள் பொருளாதாரத்தை முற்றாக முடமாக்கி விட வழியமைக்கக் கூடாது, அவைகள் முற்றாகச் சிதைந்து விடாமல் இருக்க அரசாங்கம் கை கொடுக்க வேண்டிய தருணம் இது. உணவகம், ஆடை, அலங்காரம், மோட்டார் வாகனப் பழுதுபார்ப்பு போன்று பல சிறு தொழில் முனைவர்கள் மேற்கொண்டு வந்த சிறுதொழில்களை நம்பி அவர்கள் குடும்பம் உள்ளது.

இத்தொழில்களில் ஈடுபட்டுள்ள பலர் அதிக வாடகையிலான மையங்களை வியாபாரத்துக்கு எடுத்து நடத்துகின்றனர், பல தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளனர், வணிகக் கடன்களைப் பெற்றுள்ளனர். தனியார் உயர் கல்விக்கூடங்களில், அயல் நாடுகளில் பிள்ளைகளை உயர்கல்விக்கு அனுப்பி உள்ளார்கள்.

சிறு தொழில் நடத்துனர்களும் பல வகையான கடமைகள், கடப்பாடுகளைக் கொண்டுள்ளனர். நோய்த்தொற்றைக் காரணம் காட்டி அவர்களின் தொழில்கள், குடும்பங்கள் சிதைவுற அரசாங்கம் காரணமாகி விடக்கூடாது,

அப்படிப்பட்ட நிலைகள் தொடர்ந்தால் நாம் எதிர்பார்க்காத பல விபரீதங்களை நாடு சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார் கோலாலங்காட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவருமான டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.


Pengarang :