PBTSELANGOR

சட்டவிரோதமாக குப்பை கொட்டும் நடவடிக்கையை புகார் செய்த கவுன்சிலருக்கு மிரட்டல்

பூச்சோங், பிப் 8– சட்டவிரோமாக குப்பை கொட்டும் நடவடிக்கை எதிராக புகார் செய்த சுபாங் ஜெயா மாநகர் மன்ற உறுப்பினர் ஒருவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருக்கக்கூடாது எனக் கூறிய  ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு  உறுப்பினர் இங் ஸீ ஹான், சம்பந்தப்பட்ட பகுதிகளை பாதுகாப்பதற்காகவும் அங்குள்ள மக்களின் நலனைப் பேணுவதற்காகவும் ஊராட்சி மன்ற உறுப்பினர்களை மாநில அரசு நியமிக்கிறது என்றார்.

இதுபோன்ற மிரட்டல் சம்பவங்கள் நிகழ்ந்தது குறித்து வருத்தமடைகிறேன். இதன் தொடர்பில் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதோடு ஆற்றோரங்களில் குப்பைகளைக் கொட்டும் தரப்பினருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சொன்னார்.

இங்குள்ள தாமான் மாவாரில் சட்டவிரோதமாக குப்பை கொட்டும் இடத்தில் சோதனை மேற்கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே, இந்த மிரட்டல் குறித்து கருத்துரைத்த மாநகர் மன்ற உறுப்பினரான கென்னத் சேம்ப, கடந்த ஜனவரி மாதம்தான் இப்பதவிக்கு தாம் நியமிக்கப்பட் போதிலும், இது போன்ற மிரட்டல்கள் தனது சேவையுணர்வை எந்த விதத்திலும் பாதிக்காது எனக் கூறினார்.

இரு வாரங்களுக்கு முன்னர் தம்மை அணுகிய ஆடவர் ஒருவர் சம்பந்தப்பட்ட இடத்தில் தாம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என எச்சரித்ததாக அவர் மேலும்  சொன்னார்.

இதனைத் தொடர்ந்து மிரட்டல் தொனியிலான குறுஞ்செய்தி ஒன்றையும் நான் பெற்றேன்.  இருந்த போதிலும், சட்டவிரோத குப்பை கொட்டும் நடவடிக்கையால் ஆறுகள் மாசுபடுவதைத் தடுக்க நான் தொடர்ந்து குரல் எழுப்புவேன் என்றார் அவர்.

 


Pengarang :