Media News concept

பெரிக்கத்தான் அரசாங்கம் நிழலைக் கண்டு பயப்படுவதால் பத்திரிகைகளுக்கு அச்சுறுத்தல்-அன்வார் இப்ராஹிம்

 

ஷா ஆலம், பிப 20- நாட்டை கடந்த ஒராண்டாக வழி நடத்தி வரும் பெரிக்காத்தான் அரசாங்கம், பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதன் மூலம் கருத்து சுதந்திரத்தை முடக்க முயல்வதாக எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

மலேசியா கினி இணைய ஊடகம் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டதற்கு முகம் தெரியாத இணைய பயனீட்டாளர் ஒருவர் வெளியிட்ட கருத்துதான் காரணமே தவிர, அந்த இணைய ஏடு  பொய்யான செய்தியை வெளியிட்டதால் அல்ல, அதன் செயல் பாட்டில்  தன்னம்பிக்கை இழந்த ஒரு அரசாங்கம்  மட்டுமே இது போன்றச் செயல்களில் ஈடுபடும் என்று அவர் தெரிவித்தார்.

அவசரகால நிலையை அமல் செய்தது, நாடாளுமன்றத்தை முடக்கியது, பொருளாதாரத் தோல்வி போன்ற அதன் இயலாமை போன்ற அதன் நிழலைக் கண்டு பெரிக்காத்தான் அரசாங்கம் மிரண்டுள்ளது.

அதன் பின் விளைவே பத்திரிகை சுதந்திரத்தை பறிப்பது போன்ற செயல்களின் வெளிபாடாக  இருக்கின்றது.  மக்களின் கருத்துக்களை தவிர்க்க முயல்கின்ற பலவீனமான அரசாங்கமாக நடப்பு அரசாங்கம் விளங்குவதை இது காட்டுகிறது என அவர் சொன்னார்.

வலுவான மற்றும் தன்னம்பிக்கை கொண்ட அரசாங்கம் இது போன்றச் செயல்களில் ஈடுபடாது  என்று  அவர் தெரிவித்தார்.

பல வெளிநாடுகள் இந்த அணுகுமுறையைக் கையாளுகின்றன. மலேசியாவும் சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்வதைப் போன்ற தோற்றத்தை இந்நடவடிக்கை காட்டுகிறது. இது போன்றச் செயல்கள் நாட்டின் மீதான நம்பிக்கையை சீர்குலைத்து முதலீட்டாளர்களையும் நம் பக்கம் அண்டவிடமால் செய்து விடும் என அவர் எச்சரித்தார்.

ஜனநாயகத்தின் முக்கியத் தூணாக கருத்து சுதந்திரம் விளங்குவதாக கூறிய அவர், அரசியலமைப்புச் சட்டத்தின் 10வது விதியில் குறிப்பிட்டுள்ளபடி கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கும் பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வாசகர் ஒருவர் வெளியிட்ட கருத்து மூலம் மலேசியா கினி நீதிமன்ற அவமதிப்பை புரிந்ததாக கூட்டரசு நீதிமன்றம் 6-1 என்ற பெரும்பான்மையில் நேற்று தீர்ப்பளித்தது. இக்குற்றத்திற்கு  ஐந்து லட்சம் வெள்ளி அபராதம் விதித்த நீதிமன்றம் திங்கள்கிழமை தொடங்கி மூன்று நாட்களுக்குள் அபராதத் தொகையை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.


Pengarang :