NATIONALPENDIDIKANPress Statements

பி.டி.பி.ஆர். திட்டம் நகர்ப்புற-கிராமப்புற மாணவர்களிடையே கல்வி இடையை வெளியை அதிகரிக்கும்- அன்வார் கருத்து

ஷா ஆலம், பிப் 23– வீட்டிலிருந்து கற்றல், கற்பித்தல் திட்டம் (பி.டி.பி.ஆர்.) நகர்ப்புற மற்றும் கிராமப்புற மாணவர்களிடையே கல்வி இடைவெளியை அதிகரிக்கச் செய்யும் என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இணைய வசதி மற்றும் கணினி போன்ற உபகரணங்கள் இல்லாத காரணத்தால் சுமார் எட்டு லட்சம் மாணவர்களும் பெற்றோர்களும் இந்த பி.டி.பி,ஆர். திட்டத்திற்கு தயார்படுத்திக் கொள்ள இயலாத நிலையில் உள்ளதை மலேசிய தேசிய பல்கலைக்கழக ஆய்வுகள் காட்டுவதாக அவர் சொன்னார்.

பலவீனமான திட்டமிடல் மற்றும் பெற்றோர்கள், பள்ளி நிர்வாகங்களுடன் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவுகள் காரணமாக இத்திட்ட அமலாக்கத்தில் குழப்ப நிலை நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிராமப்புற மாணவர்களைக் காட்டிலும் நகர்ப்புற மாணவர்கள் கூடுதலான கல்வி வாய்ப்புகளைப் பெறும் போது கல்வியில் சமநிலையற்றப் போக்கு ஏற்பட்டு ஒரு தரப்பினருக்கு இழப்பு ஏற்படும் என்றார் அவர்.

முகநூல் வாயிலாக நடைபெற்ற விவாத  நிகழ்வில் கலந்து கொண்ட போது கெஅடிலான் கட்சியின் தலைவருமான அவர் இதனைத் தெரிவித்தார்.

கல்வி விவகாரங்கள் குறிப்பாக வீட்டிலிருந்து கற்றல், கற்பித்தலை  மேற்கொள்ளும் திட்டம் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் மத்தியில் எதிர்மறையான கருத்துக்களை தோற்றுவித்துள்ளன என்றும் அவர் சொன்னார்.

கடந்த காலங்களில்  முறையான திட்டமிடல் இன்றி எடுக்கப்பட்ட முடிவுகளால் உண்டான பாதிப்புகளை நாம் படிப்பினையாகக் கொள்ள வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக அனைத்து ஆரம்பப் பள்ளி மாணவர்களும் முதல் படிவம் முதல் நான்காம் படிவம் வரையிலான மாணவர்களும் ஜனவரி 20 ஆம் தேதி முதல் வீட்டிலிருந்து கற்றல்,கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது.


Pengarang :