ECONOMYMEDIA STATEMENTSELANGOR

பொருளாதார பாதிப்பை சமன் செய்ய பட்ஜெட்டை மறு ஆய்வு செய்யத் தயார்- மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், பிப் 24– கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக மக்கள் எதிர்நோக்கியுள்ள பாதிப்பை சரிபடுத்த 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை மறுஆய்வு செய்ய சிலாங்கூர் அரசு தயாராக உள்ளது.

கடந்தாண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் தாக்கம் இவ்வாண்டின் முதல் காலாண்டில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுவதால் மாநில அரசு இந்நடவடிக்கையை எடுக்க தயாராக உள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ள சவால்களைச் சமாளிக்க வரவு செலவுத் திட்டத்தில் நாம் வழங்கிய முக்கியத்துத்தை  மற்ற மாநிலங்களும் வழிகாட்டியாக கொள்ள வேண்டும். நமது ஆற்றலை உறுதி செய்வதற்கு உள்ளூர் தொழில்துறைகளும் மேம்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.

இயங்கலை வாயிலாக நேற்று நடைபெற்ற ‘பெருந்தொற்றுக்கு பிந்தைய பொருளாதாரம்- எதை நோக்கி நமது இலக்கு‘ எனும் தலைப்பிலான விவாத நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.

பெருந்தொற்றினால் ஏற்பட்ட  பாதிப்புகளிலிருந்து மீள்வதற்காக உள்ளூர் தொழில்துறையை மேம்படுத்துவதில் மாநில அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அனைத்து விவகாரங்களிலும் முன்னோக்கிச் செல்வதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் குழுமத்தை உருவாக்குவதில் சிலாங்கூர் முனைப்பு காட்டுவதாகவும் அவர் சொன்னார்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஏற்ற வகையில் உயர் தொழில்நுட்பம், வான் போக்குவரத்து, வாகன தொழில்துறைகளை உள்ளடக்கிய பொருளாதார மையத்தை உருவாக்குவதற்கு ஏதுவாக ஒன்பது பிரதான குழுமங்கள் அமைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.


Pengarang :