EVENTMEDIA STATEMENTNATIONALSELANGOR

எஸ்.ஒ.பி. விதிமுறைகளை மீறுவோருக்கு வெ.10,000 அபராதம்- முடிவை மறுஆய்வு செய்ய அன்வார் வலியுறுத்து

ஷா ஆலம், பிப் 27– கோவிட்-19 நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) மீறுவோருக்கு பத்தாயிரம் வெள்ளி அபராதம் விதிக்கும் முடிவை மறுஆய்வு செய்யும்படி அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த அதிகப்பட்ச அபாராதம் மக்களுக்கு சுமையையும் அதிக சிரமத்தையும் கொடுக்கும். ஏனென்றால் இதுபோன்ற குற்றங்களுக்கு அத்தரப்பினர் மட்டுமே தண்டிக்கப்படுவார்கள்  என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

செல்வாக்கு உள்ளவர்கள், மேல் மட்டத்தினர் மற்றும் உயரிய அந்தஸ்து கொண்டவர்களில் பலர் எஸ்.ஒ.பி. விதிமுறைகளை மீறியது  நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களுக்கு அதிகப்பட்ச அபராதம் விதிக்கப்பட்டதில்லை. அபராதம் விதிக்கப்பட்டாலும் அவர்களால் பேரம் பேச முடிகிறது என்றார் அவர்.

அரசாங்கம் ஏன் தன்மூப்பாகவும் மக்களை சிறிதும் பொருட்படுத்தாமலும் இருக்கிறது என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சுகாதாரத்திற்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதால் எஸ்.ஒ.பி. விதிமீறலை நான் இலகுவாக எடுத்துக் கொள்ளவில்லை. எனினும், இவ்விவகாரத்தில் கடைபிடிக்கும் அணுமுறையைத்தான்  என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை என்று அவர் சொன்னார்.

அபராதத் தொகையை அதிகரிப்பதற்கு பதிலாக மக்கள் மத்தியில் காணப்படும் வேலையின்மை, வறுமை, குடியிருப்புப் பிரச்னை ஆகியவற்றுக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறுவதை தவிர்ப்பதற்காகவும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் அரசியல் நோக்கங்களுக்காக முடிவுகளை எடுப்பதற்காகவும் மட்டுமே அவசரகாலம் பிரகடனப்படுத்தப்பட்டதோ என்ற அச்சம் தோன்றுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :