நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 20,000 குடும்பங்களுக்கு உதவ பண்டார் உத்தாமா தொகுதி இலக்கு

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 4– கோவிட்-19 கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட சுமார் 20,000 குடும்பங்களுக்கு உதவ பண்டார் உத்தாமா சட்டமன்றத் தொகுதி திட்டமிட்டுள்ளது.

இத்தகைய தரப்பினருக்கு உதவுவதற்காக மாநிலத்திலுள்ள ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ஒரு லட்சம் வெள்ளியை மாநில அரசு மானியமாக வழங்கியுள்ளதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

இருந்த போதிலும் தொகுதியிலுள்ள அனைத்து மக்களும் பயன்பெறுவதை உறுதி செய்வதற்காக தங்களின் சொந்த நிதியையும் இத்திட்டத்திற்கு பயன்படுத்தவுள்ளதாக அவர் சொன்னார்.

வசதி குறைந்தவர்களின் கோரிக்கைகளை ஏற்று அவர்களின் தேவையின் அடிப்படையில் வேண்டிய உதவிகளை செய்வதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் என்றார் அவர்.

உதவி தேவைப்படும் பொதுமக்கள் தொகுதி  சேவை மையத்தில் அதற்கான மனுபாரங்களைப் பெற்று விண்ணப்பம் செய்யலாம் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.

மனுபாரங்களை தனது முகநூல் வாயிலாகவும் பெறலாம் எனக் கூறிய அவர், இவ்வாண்டு முழுவதும் இதற்கான விண்ணப்பத்தைச் செய்வதற்கு கால அவகாசம் உள்ளது என்றார்.


Pengarang :