ECONOMYPBTSELANGOR

இணையம் வழி வர்த்தகத் திட்டம்- கம்பம் துங்கு சட்டமன்ற உறுப்பினர் தொடக்கினார்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 10- கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு உதவும் வகையில் இணையம் வழி தொழில்முனைவோர் திட்டத்தை கம்பம்  துங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் யீ வேய் தொடக்கியுள்ளார்.

யீசா ஸ்டோர் (Yezza Store) எனும் இணைய வர்த்தக தளத்தின் வாயிலாக விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குரிய வாய்ப்புகள் வணிகர்களுக்கு ஏற்படுத்தித் தரப்படும் என்று அவர் சொன்னார்.

இந்த இணைய வர்த்தக திட்டத்திற்கு 100 பங்கேற்பாளர்களை தாங்கள் இலக்காக கொண்டுள்ளதாக கூறிய அவர், அவர்களுக்கு மூன்று மாத சேவைக் கட்டண விலக்களிப்பு வழங்கப்படும் என்றார்.

இத்திட்டத்தை அமல்செய்வதற்கு நாங்கள் பத்தாயிரம் வெள்ளி வரை செலவிட்டுள்ளோம். சிறிய அளவில் வியாபாரம் செய்வோரின் வருமானத்தை பெருக்குவதற்கு இத்திட்டம் துணை புரியும் என நம்புகிறோம் என்றார் அவர்.

இத்திட்டத்தில் பங்கேற்க விரும்புவோர்  https://adunkgtungku.yzza.io/dme  எனும் அகப்பக்கம் வாயிலாக இம்மாதம் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம். ஒவ்வொரு விண்ணப்பமும் நன்கு பரிசீலிக்கப்பட்டு தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.

மகளிர் தினத்தை முன்னிட்டு, அத்திட்டதிற்கு தேர்ந்தெடுக்கப்படும் அந்த 100 பங்கேற்பாளர்களில் 38 பேர் பெண்களாக இருப்பது உறுதி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வியாபாரிகளுக்கு உதவும் நோக்கில் மாநில அரசாங்கம் முன்னெடுத்துள்ள பல்வேறு இணைய வர்த்தக திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது என்றும் அவர் மேலும் சொன்னார்.


Pengarang :