ECONOMYPBTSELANGOR

இலவச கோவிட்-19 பரிசோதனையில் 20 பேரிடம் நோய்த் தொற்று கண்டுபிடிப்பு

ஷா ஆலம், மார்ச் 12– சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் கடந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற இலவச கோவிட்-19 பரிசோதனையில் 20 பேருக்கு அந்நோய்த் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

நோய்த் தொற்று சாத்தியம் அதிகம் உள்ள நான்கு இடங்களில் நடத்தப்பட்ட  பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொண்ட 884 பேரில்  நோய்த் தொற்றினால் பீடிக்கப்பட்ட அந்த 20 பேர் அடையாளம் காணப்பட்டதாக கிளினிக் செல்கேர் நிர்வாகி முகமது நோர் முகமது நாசீர் கூறினார்.

எம்.பி.எஸ்.ஏ. ராசாக் மண்டபம், ஸ்ரீ கெம்பாங்கான் எம்.பி.பி.ஜே. பல்நோக்கு மண்டபம், ஷா ஆலம், செக்சன் 15, டத்தாரான் ஆட்டோமோபைல் வளாகம், கோத்தா டாமன்சாரா, செக்சன் 2, பல்நோக்கு மண்டபம் ஆகிய இடங்களில் அச்சோதனை மேற்கொள்ளப்பட்டது என்று அவர் சொன்னார்.

இலக்கு நிர்ணயிக்கப்பட்ட அந்த சோதனை நடவடிக்கையில் நோய்த் தொற்று உள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டதன் மூலம் அவர்கள் வாயிலாக மற்றவர்களுக்கு நோய்ப் பரவுவது தடுக்கப்பட்டது என்றார் அவர்.

இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பண்டார் புக்கிட் பூச்சோங், தாமான் பத்து தீகா, ஷா ஆலம், செக்சன் 27 மற்றும் யுஎஸ்ஜே 7 ஆகிய இடங்களில் காலை மணி 9.00 முதல் மாலை மணி 4.00 வரை நடைபெறும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கோவிட்-19 தொற்றைத் தடுக்கும் முயற்சியாக மாநிலம் முழுவதும் இலவச கோவிட்-19  பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக மாநில அரசு 60 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.


Pengarang :