MDHS mengeluarkan notis kacau ganggu dan kompaun kepada kilang penternakan ayam berkaitan kacau ganggu lalat. Foto Sumber: Majlis Daerah Hulu Selangor
ECONOMYPBTSELANGOR

1,800 சட்டவிரோத தொழிற்சாலைகளுக்கு நிபந்தனைகளை பின்பற்றக் கோரும் உத்தரவு

ரவாங், மார்ச் 15– செலாயாங் நகராண்மைக்கழகத்தின் அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள 1,800 தொழிற்சாலைகளுக்கு நிபந்தனை மற்றும் அமலாக்கத்தை பின்பற்றக் கோரும் உத்தரவு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இத்தொழிற்சாலைகள் லைசென்ஸ், திட்டமிடல் அனுமதி மற்றும் கட்டிட அனுமதியைக் கொண்டிராததோடு நில தகுதி பிரச்னையையும்  எதிர்நோக்கியுள்ளதை கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் கூறினார்.

இந்த உத்தரவின் நோக்கத்தை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்வதற்கும் சட்டவிரோத தொழிற்சாலைகளை சட்டப்பூர்வமாக்கும் பணிகளை எளிதாக்குவதற்கும் ஏதுவாக செலாயாங் நகராண்மைக்கழகத்தின் திட்டமிடல் பிரிவுடன் சந்திப்பு ஒன்று நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இரு தரப்புக்கும் பாதகமில்லாத வகையில் முடிவுகள் எட்டப்படுவதற்கு ஏதுவாக தொடர் நடவடிக்கைகள் குறித்து விரிவான விளக்கத்தை சம்பந்தப்பட்ட தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு வழங்குவது நமது கடமையாகும் என அவர் சொன்னார்.

இந்த உத்தரவு கடிதங்கள் குறித்து தொழிற்சாலை உரிமையாளர்கள் அச்சமடைய வேண்டியதில்லை எனக் கூறிய அவர், மாறாக, மேலும் கடுமையான நடவடிக்கைகளுக்கு ஆளாவதை தவிர்க்க சம்பந்தப்பட்டத் தரப்பினருடன் ஒத்துழைக்க அவர்கள் முன்வர வேண்டும் என்றார்.

தொழிற்சாலைகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கும் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்ப்பதற்கும் ஏதுவாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :