ECONOMYSELANGOR

சிலாங்கூரில் 200க்கும் மேற்பட்ட சட்டவிரோத பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் மூடப்பட்டன.

ஷா ஆலம், மார்ச் 17– கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் முதல் கடந்த டிசம்பர் மாதம் வரை சிலாங்கூரில் மேற்கொள்ளப்பட்ட தொழிற்சாலைகளை சட்டப்பூர்வமாக்கும் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் செயல்பட்ட 200க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் மூடப்பட்டன.

பதனீட்டு நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளிலிருந்து பிளாஸ்டிக் பொருள்களை நாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளை சிலாங்கூர் ஒரு போதும் அனுமதிக்காது என்று ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

ஆயினும், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள 100 தொழிற்சாலைகளுக்கு மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளதாக கூறிய அவர், எனினும், அவை சிறிய அளவில் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் சொன்னார்.

உள்நாட்டு பயனீட்டுக்கு அப்பொருள்கள் தேவைப்படுவதால் அனைத்து பிளாஸ்டிக் மறுசூழற்சி தொழிற்சாலைகளையும் மூடிவிட முடியாது. ஆகவே, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யாமல் உள்நாட்டு பிளாஸ்டிக் பொருள்களை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளோம் என்றார் அவர்.

அத்தொழிற்சாலைகள் அனைத்து சுற்றுச்சூழல் துறையின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயல்பட  அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இங்குள்ள சுல்தான் சலாவுடின் அப்துல் அஜிஸ் ஷா கட்டிடத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

குறைவான எண்ணிக்கையிலான நிறுவனங்களுக்கு பிளாஸ்டிக் பொருள்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், ஏ.பி.(APs) எனப்படும் இறக்குமதி அங்கீகார உள்ள நிறுவனங்கள் மட்டுமே அவ்வாறு செய்ய முடியும் என்றார் அவர்.


Pengarang :