ECONOMYSELANGORYB ACTIVITIES

இன்று தொடங்கி குடிநீர் விநியோகத் தடை- தயார் நிலையில் இருக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்து

ஷா ஆலம், மார்ச் 30– இங்குள்ள செக்சன் 15, பெர்சியாரான் சிலாங்கூர் பகுதியில் இன்று தொடங்கி குழாய் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளதால் சிலாங்கூரின் 30 பகுதிகளில் நீர் விநியோகத் தடை ஏற்படும்.

இந்த நீர் விநியோகத் தடையை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருக்கும்படி பொதுமக்களை ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

மார்ச் மாதம் 30ஆம் தேதி காலை 9.00 மணி தொடங்கி 48 மணி நேரத்திற்கு அட்டவணையிட்டப்பட்ட நீர் விநியோகத் தடை ஏற்படும் என்று ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கடந்த வாரம் கூறியிருந்தது.

நீர் விநியோக அளவு, குடியிருப்புகள் அமைந்துள்ள இடம், நீர் அழுத்தம் உள்ளிட்ட அம்சங்களைப் பொறுத்து நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பும் காலம் நிர்ணயிக்கப்படும் என்றும் அது தெரிவித்திருந்தது.

பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் போதுமான அளவு நீரை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதோடு நீரை சிக்கனமாகவும் பயன்படுத்த வேண்டும் என்று அது வலியுறுத்தியது.

இந்த குழாய் பராமரிப்பு பணி  காரணமாக பெட்டாலிங் வட்டாரத்தில் 5 பகுதிகளும் கிள்ளானில் 14 பகுதிகளும் ஷா ஆலமில் 11 பகுதிகளும் பாதிக்கப்படும் என்று ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் வர்த்தக தொடர்பு பிரிவுத் தலைவர் எலினா பாஸ்ரி கூறியிருந்தார்.

பராமரிப்பு பணிகள் 30ஆம் தேதி காலை காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணிவரை மேற்கொள்ளப்படும். வரும் ஏப்ரல் 1ஆம் தேதி காலை 9.00 மணிக்கு நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பும்.

நீர் விநியோகத் தடை தொடர்பான மேல் விபரங்களை http://www.airselangor.com  என்ற அகப்பக்கம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.


Pengarang :