ECONOMYSELANGORYB ACTIVITIES

பாதிக்கப்பட்டத் தரப்பினருக்கு உதவ வரவு செலவுத் திட்டம் மறுஆய்வு- மந்திரி புசார் பரிந்துரை

ஷா ஆலம், மார்ச் 30– கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம் இன்னும் குறையாமலிருப்பதை கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை நோன்பு பெருநாளுக்குப் பின்னர் மறுஆய்வு செய்ய மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

குறிப்பிட்ட சில திட்டங்களை ஒத்தி வைக்கும் வகையில் புதிய வரவு செலவுத் திட்டத்தை வரையவேண்டியுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அத்திட்டங்களுக்கு செலவிடும் தொகையை குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு உதவுவதற்கு பயன்படுத்த இது வழி வகுக்கும் என அவர் தெரிவித்தார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் அமலாக்கம் காரணமாக சில மக்கள் நலத் திட்டங்களும் மேம்பாட்டுத் திட்டங்களும் ஆண்டு தொடக்கத்தில் அமல்படுத்த முடியாமல் போனதாக அவர் சொன்னார்.

வரும் ஜூன் அல்லது ஜூலை மாதவாக்கில் வரவு செலவுத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம். எனினும், அவசரகால பிரகடனத்தின் ஆகக் கடைசி நிலவரங்களைப் பொறுத்து சட்டமன்றத்தை கூட்டுவது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார் அவர்.

இங்குள்ள சிலாங்கூர் பொது நூலகத்தில் நடைபெற்ற ஹிஜ்ரா சிலாங்கூர் கடனுதவி அமைப்பின் ஆறாம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

சட்டமன்றக் கூட்டத்தை கூட்டுவதற்கு மாட்சிமை தங்கிய மாமன்னரின் அனுமதி தேவை என்றும் அவர் குறிப்பிட்டார். புதிய சட்ட மசோதாக்களை தாக்கல் செய்வது அல்லது சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அரண்மனையின் அனுமதியைப் பெறுவது அவசியம் என்று அவர் மேலும் சொன்னார்.

 


Pengarang :